திருச்சி

காரைக்கால் கடலோரக் காவல் நிலையம் வலுப்படுத்தப்படுமா?

காரைக்கால், ஜூலை 18: காரைக்காலில் ரோந்துப் படகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதேநேரத்தில், கடலோரக் காவல் நிலையத்தில் காவலர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப அலுவலர்களின் எண்ணிக்கையையும் புதுவை அரசு அதிகரிக்க

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

காரைக்கால், ஜூலை 18: காரைக்காலில் ரோந்துப் படகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதேநேரத்தில், கடலோரக் காவல் நிலையத்தில் காவலர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப அலுவலர்களின் எண்ணிக்கையையும் புதுவை அரசு அதிகரிக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

     காரைக்கால் மாவட்டத்தில் கடலோரக் காவல் நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்ததன்பேரில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் கட்டடத்தில் காவல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து இயங்கி வருகிறது.

     மாவட்டத்தில் தெற்கு வடக்காக 21 கி.மீ. காரைக்கால் பகுதி கடல் எல்லையாக உள்ளது. கரையிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவுவரை கடலுக்குள் ரோந்துப் பணி மேற்கொள்ள வேண்டும் என்று இந்தக் காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

      ரோந்துப் பணிக்கென 5 டன் எடை கொண்ட நவீன ரோந்துப் படகு தரப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 4 மணி நேரம் கடலுக்குள் ரோந்து செல்ல வேண்டும் என்பது விதி.

ஆனால், உரிய அளவு எரிபொருள் கொடுக்கப்படாததால், மாதத்தில் 15 நாள்கள் மட்டுமே ரோந்துப் பணி மேற்கொள்ளப்படுகிறது. எஞ்சிய நாள்களில் படகு நிறுத்தியே வைக்கப்பட்டுள்ளதாம். நிகழ் மாதமும் இந்த நிலையே தொடர்கிறதாம்.

     இந்தக் கடலோர காவல் நிலையத்தில் தலா ஓர் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்பட 18 பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் சிலர் அவ்வப்போது வேறு பணிகளுக்கும் அழைத்து கொள்ளப்படுகின்றனராம். இதனால், காவல் நிலைய கண்காணிப்பு, ரோந்துப் பணி ஆகியவற்றுக்கு அடிக்கடி ஆள் பற்றாக்குறை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், கடலோரக் கண்காணிப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

    இந்நிலையில், அதிநவீன 12 டன் எடை கொண்ட, பல்வேறு வசதிகள் மற்றும் ஆழ்கடல் பகுதிக்கு செல்லக் கூடிய புதிய ரோந்துப் படகு இந்த மாத இறுதிக்குள்ளாக காரைக்கால் வரவுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அண்மையில் தெரிவித்தார்.

    அந்தப் படகு ஜூன் 14 ஆம் தேதி கொல்கத்தா படகு கட்டும் தளத்திலிருந்து அனுப்பப்பட்டு, சாலை வழியாக காரைக்கால் வந்து கொண்டிருப்பதாக உறுதியான தகவல் தெரிவிக்கிறது. மேலும், விசைப் படகு ஒன்றையும் வாடகைக்கு எடுத்து, ரோந்துப் பணியில் ஈடுபடுத்தவும் புதுவை அரசு முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனவாம்.

    இதுதவிர, புதுச்சேரியிலிருந்து 12 டன் ரோந்துப் படகு ஒன்றும் காரைக்காலுக்கு ரோந்துப் பணிக்கென அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் படகுகள் அனைத்தும் ஒரு மாத காலக்கெடுவுக்குள் காரைக்காலுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், ரோந்துப் படகுகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிக்கும் என்கின்றன காவல் துறை வட்டாரங்கள்.

     ரோந்துப் படகுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அவற்றை இயக்க, ரோந்துக்கு செல்ல தேவையான காவலர்கள், தொழில்நுட்ப அலுவர்களையும் அரசு நியமிக்க வேண்டும் என்று காவல் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

       காரைக்காலில் குடியேற்றப் பிரிவு அலுவலகம் இல்லாமலேயே கப்பல் துறைமுகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற பல்வேறு குளறுபடிகள் மாவட்டத்தில் நிலவி வரும் நிலையில், காரைக்கால் பகுதியில் கண்காணிப்புப் பணியை வலுப்படுத்தும் விதமாகவே, கடலோரக் காவல் நிலையத்துக்கு கூடுதல் ரோந்துப் படகுகள் அளிக்கப்படுவதாக கூறும் சமூக ஆர்வலர்கள், போதிய காவலர்களையும், தொழில் நுட்ப நிபுணர்களையும் அங்கு நியமித்து, கடலோரக் காவல் நிலையத்தை வலுப்படுத்தி, உள்நாட்டுப் பாதுகாப்பு, கண்காணிப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT