திருச்சி, ஜூன் 23: திருச்சியில் புதை சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளைச் சரி செய்யும் பணியில் மனிதர்களைப் பயன்படுத்தி உயிரிழப்புகள் நிகழ்ந்து வரும் நிலையில், இனி வருங்காலங்களிலாவது உயிரிழப்பைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சி மாநகராட்சிப் பகுதியில் ரூ. 116 கோடியில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் 2003, செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கப்பட்டு, 2008, மார்ச் மாதத்தில் நிறைவடைந்தன. இத் திட்டத்துக்காக 30 கி.மீ. தொலைவுக்கு பிரதான உந்துநீர்க் குழாய்களும், 183.27 கி.மீ. தொலைவுக்கு கழிவு நீர்க் குழாய்களும், 45 கழிவு நீரேற்று நிலையங்களும், 7216 ஆள் நுழைவுத் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், 574 ஏக்கர் பரப்பளவில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ், 23,735 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வீட்டு இணைப்புகளுக்கு ரூ. 6,000-ம், வணிகப் பயன்பாட்டுக்கு ரூ. 10,000-ம் இணைப்புக் கட்டணமாக பெறப்படுகின்றன.
புதை சாக்கடைத் திட்டப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்ட போதே, பணிகள் முடிக்கப்பட்டதிலிருந்து 3 ஆண்டுகள் பராமரிப்புப் பொறுப்பையும் அவர்கள்தான் மேற்கொள்ள வேண்டும் என நிபந்தனை இருப்பதால் பராமரிப்பு பொறுப்பை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, திட்டப் பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொண்டதால், தற்போது பராமரிக்கும் பொறுப்பையும் அவர்களிடம் வழங்கியுள்ளது.
புதை சாக்கடையில் அடைப்புகள் ஏற்பட்டால் அவற்றைச் சரி செய்வது, கழிவு நீரேற்றும் நிலையங்களுக்கு கழிவுநீரை உந்தித் தரும் ஆள் நுழைவுத் தொட்டிகளில் ஏற்படும் கோளாறுகளைச் சரிசெய்வது ஒப்பந்த நிறுவனத்தின் பணியாகும்.
அந்த வகையில், புதை சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளைச் சரிசெய்ய ஒப்பந்த நிறுவனம் மூலம் தொழிலாளர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்பப்பட்டு, அடைப்பு சரி செய்யப்படும் பணி நடைபெற்று வருகிறது.
தொடரும் உயிரிழப்புகள்: இந்த நிலையில், ஸ்ரீரங்கம் வீரேசுவரம் பகுதியில் 2009, ஆகஸ்ட் மாதத்தில் புதை சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்யச் சென்ற துப்புரவுத் தொழிலாளர்கள் மூவர் உயிரிழந்தனர். அதன் பின்னர், திருவானைக்கா ஸ்ரீநகர் பகுதியில் கழிவு நீரேற்று நிலையத்துக்கு நீரை உந்தித் தரும் ஆள் நுழைவுத் தொட்டியில் பழுதான மின் மோட்டாரை மாற்றி, புதிய மோட்டாரை பொருத்தச் சென்ற தொழிலாளர்கள் இருவர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
பழைய நகராட்சிப் பகுதிகளில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட புதை சாக்கடைத் திட்ட பராமரிப்புப் பணியை தற்போது மாநகராட்சிதான் மேற்கொண்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் புதை சாக்கடையில் ஏற்படும் கோளாறுகளைச் சரிசெய்ய "ஜெட்ரேடர்' இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதாவது, நீண்ட குழாய் புதை சாக்கடைக்குள் விடப்பட்டு, உள்ளே காற்று செலுத்தப்பட்டு அடைப்புகளோ அல்லது வேறு கோளாறுகளோ சரி செய்யப்படுகின்றன.
ஆனால், தற்போது புதை சாக்கடைத் திட்டத்தின் பராமரிப்புப் பணிகள் குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டு வருகிறது. வாரியம் ஒப்பந்ததாரர்களை நம்பி பணிகளை விட்டுள்ளது. ஒப்பந்ததாரர்களில் சிலர் இயந்திரத்தைப் பயன்படுத்தாமல் குடிநீர் வடிகால் வாரியத்துக்குத் தெரியாமல், மனிதர்களை கழிவு நீர் அடைப்பைச் சரிசெய்யவோ அல்லது இதரப் பணிகளுக்கோ பயன்படுத்தி வருகின்றனர். சில நேரங்களில் இதுபோன்ற உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
மனிதக் கழிவுகளையோ, கழிவுநீரையோ அகற்றும் பணியில் மனிதர்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தொடர்ச்சியாக புதை சாக்கடையில் பணிகளை மேற்கொண்ட 5 பேர் உயிரிழந்திருப்பது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
எவ்வளவுதான் இழப்பீடு தொகை வழங்கினாலும் மாண்டு போன மனித உயிர் மீண்டும் வராது. பலவற்றிலும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இயந்திரத்தைப் பயன்படுத்தி வரும் இந்த 21 ஆம் நூற்றாண்டில், இன்னமும் சில இடங்களில் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் அரங்கேறித்தான் வருகிறது.
நமது வீட்டில் கழிவறை கட்டும் போது கழிவுநீர் அடைப்பு ஏற்படாமல் காற்று வெளியே செல்ல காற்று வாங்கிகளை அமைத்திருப்போம். ஆனால், ரூ. 116 கோடியில் திட்டம் தீட்டியவர்கள் காற்று அடைப்பு ஏற்படாத வகையில் "காற்று வாங்கி'யை அமைக்காமல் மறந்துவிட்டது ஏன் என்று தெரியவில்லை.
யாரையும் குறை சொல்லி இனி பயனில்லை. இனியாவது புதை சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளைச் சரிசெய்யும் பணியில் மனிதர்களைப் பயன்படுத்தாமல், இயந்திரங்களைப் பயன்படுத்தி உயிரிழப்பைத் தடுக்க உரியவர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.