திருச்சி

போதிய வசதிகள் இல்லாத புறநகர் மகளிர் காவல் நிலையங்கள்

திருவெறும்பூர், நவ. 23: தமிழகத்தில் உள்ள புறநகர் மகளிர் காவல் நிலையங்களில் போதிய வசதிகள் இல்லாததால், காவலர்கள் மற்றும் புகார் கொடுக்க வரும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  பெண் கைதிகளை விசாரிப்பதற

சி.சண்முகவேல்

திருவெறும்பூர், நவ. 23: தமிழகத்தில் உள்ள புறநகர் மகளிர் காவல் நிலையங்களில் போதிய வசதிகள் இல்லாததால், காவலர்கள் மற்றும் புகார் கொடுக்க வரும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 பெண் கைதிகளை விசாரிப்பதற்காக தமிழகத்தில் கடந்த 1977 ஆம் ஆண்டு முதன் முதலில் காவல் நிலையங்களில் பெண் காவலர்களைத் தமிழக அரசு பணியமர்த்தியது.

  பின்னர், 1992 ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாவட்டத் தலைமையகங்களில்  தனிக் கட்டடத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்படத் தொடங்கின.

 இதைத் தொடர்ந்து, 2002 ஆம் ஆண்டில் காவல் உள் கோட்ட அளவில் (துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக எல்லைக்கு உள்பட்டது) அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டன.

 தற்போது, தமிழகத்தில் நகர்ப்புற அனைத்து மகளிர் காவல் நிலையம், புறநகர் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் என மொத்தம் 198 மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன.இந்தக் காவல் நிலையங்களுக்கு வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மேலும், ஆவணங்களைப் பாதுகாக்க கணினி வசதி, உயர் அதிகாரிக்கு அவசரச் செய்திகள் அனுப்ப பேக்ஸ், மற்றும் நகல் எடுக்கும் கருவி வசதிகளையும் செய்தது தமிழக அரசு.  ஆனால், பல புறநகர் காவல் நிலையங்களில் இருக்கும் வாகனங்கள், கணினிகள், பேக்ஸ், நகல் எடுக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை உயர் அலுவலர்கள் எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

  திருச்சி மாவட்டத்தில் மாநகரில் உள்ள ஸ்ரீரங்கம், பொன்மலை, கன்டோன்மென்ட், கோட்டை ஆகிய காவல் நிலையங்களும், புறநகரில் திருவெறும்பூர், லால்குடி, முசிறி, மணப்பாறை ஆகிய புறநகர் காவல் நிலையங்களும் உள்ளன. இதில் திருவெறும்பூர் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டுக்குள் ஜீயபுரம், மணிகண்டம் பகுதிகளும் உள்ளன.

இதனால், இந்தக் காவல் நிலையத்தின் எல்லைகள் நெடுந்தொலைவுக்குப் பரவியுள்ளன. ஆனால், இந்த நிலையத்தில் வாகனங்கள் கிடையாது. தொடக்கத்தில் இருந்த கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை உயர் அதிகாரிகள் எடுத்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

 அதனால், விசாரணைக்குச் செல்ல வேண்டுமானால், கார் உள்ளிட்ட வாகன  வசதிகளை, புகார் கொடுக்க வருபவர்கள்தான் செய்து தர வேண்டும் எனக் காவலர்கள் கட்டாயப்படுத்துவதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

 இதுகுறித்து புகார் கொடுக்க வந்த ஓர் பெண் கூறியது:  பேட்டைவாய்த்தலை அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது கணவர் என்னை துன்புறுத்தி வருகிறார் என்று புகார் கொடுக்க வந்தால், விசாரணைக்கு சென்று வர கார் வசதி செய்து தர வேண்டும் என்று காவல் நிலையத்தில் வலியுறுத்துகின்றனர். கார் வசதி செய்ய குறைந்தது | 1000-த்துக்கு மேல் செலவாகும் என்றார்.

இதுகுறித்து பெண் காவலர் ஓருவர் கூறியது:

இந்த அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கென தனிக் கட்டடம், மக்கள் கொடுக்கும் புகார்களை விசாரிக்கச் செல்ல வாகன வசதி மற்றும் கணினி, பேக்ஸ், நகல் எடுக்கும் கருவி வசதிகள் என அனைத்தும் அளிக்கப்பட்டன.

ஆனால், உயர் அதிகாரிகள் அனைத்தையும் பறித்துச் சென்றுவிட்டனர். புறநகர்ப் பகுதியில் உள்ள காவல் நிலையங்களின் எல்லைகள் அதிகம், அதனால், புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கார் வசதி செய்து தருமாறு கேட்டுப் பெற வேண்டிய நிலை உள்ளது.

மேலும், 43 காவலர்கள் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது 16 பேர் மட்டுமே பணியாற்றி வருகிறோம். அதிலும் பாதிப் பேரை நாள்தோறும் ஆங்காங்கே நடைபெறும் அரசியல், அரசு நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்புப் பணிக்கு அனுப்பி விடுகின்றனர்.

மீதியுள்ள காவலர்களும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும்,  நீதிமன்றப் பணிக்கும் சென்று விடுகின்றனர். மகளிர் காவல் நிலையங்கள் தற்போது எழுத்தர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதனால், புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் விசாரணை அதிகாரிகள் இல்லை; மறுநாள் வருமாறு அனுப்பி விடுகிறோம் என்றார் அவர்.

இந்த நிலைமை மாநில அளவில் புறநகரில் உள்ள பல மகளிர் காவல் நிலையங்களிலும் நிலவுவதாக போலீஸôர் தெரிவிக்கின்றனர். இதனால், இந்தக் காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்கச் செல்ல பொதுமக்கள் தயங்குகின்றனர். வசதி படைத்தவர்கள் மட்டுமே புகார் கொடுக்க காவல் நிலையங்களுக்குச் செல்ல முடியும் என்ற நிலை நிலவுகிறது.

 இந்த பிரச்னைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்து ஏழை மக்களும் எந்தவிதச் செலவும் இன்றி நீதி பெற காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT