திருச்சி

முன்மாதிரி ஊருணி சீரமைக்கப்படுமா?

திருவெறும்பூர், செப். 8: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகேயுள்ள எல்லக்குடி ஊராட்சியில் அமைக்கப்பட்ட- தமிழகத்தின் முன்மாதிரி ஊருணி என்று அழைக்கப்பட்ட ஊருணி போதிய பராமரிப்பின்றி, தண்ணீர் இன்றி வறண

சி.சண்முகவேல்

திருவெறும்பூர், செப். 8: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகேயுள்ள எல்லக்குடி ஊராட்சியில் அமைக்கப்பட்ட- தமிழகத்தின் முன்மாதிரி ஊருணி என்று அழைக்கப்பட்ட ஊருணி போதிய பராமரிப்பின்றி, தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

    தமிழகக் கிராமங்களில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தும் நோக்கில், கடந்த 2007-ல் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இதன்மூலம் கிராம ஊராட்சிகளில் சாலை அமைத்தல், சிமென்ட்- தார் சாலை அமைத்தல், ஊர்ப்புற நூலகங்கள் அமைத்தல், விளையாட்டு மைதானம் அமைத்தல் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

   இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்திலேயே முதன் முதலாக திருச்சி மாவட்டம், திருவெறும்பூர்  ஊராட்சி ஓன்றியத்துக்குள்பட்ட எல்லக்குடி ஊராட்சியில் கடந்த 2007-2008 நிதியாண்டில் | 5 லட்சத்தில் அமைக்கப்பட்ட- தமிழகத்தின் முன்மாதிரி ஊருணி என்றழைக்கப்பட்ட ஊருணி தற்போது பொலிவிழந்து, பராமரிப்பின்றி காணப்படுகிறது.

   தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்த இந்த ஊருணியைச் சுற்றி பூங்கா அமைக்கப்பட்டு, அலங்கார ஒளி விளக்குகள், நடைபாதை மேடைகள், பொதுமக்கள் அமருவதற்கான இருக்கைகளும் அழகுற அமைக்கப்பட்டன. இயற்கைச் சூழல் நிறைந்ததாக அமைக்கப்பட்ட இந்த ஊருணிக்கு சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது ஓய்வு நேரங்களில் பொழுதுபோக்குவதற்காக வந்து சென்றனர்.

   பின்னர், இந்த ஊருணி பராமரிக்கப்படாமல் இருந்ததால், அலங்கார ஒளி விளக்குள் பழுதடைந்து, நடைபாதை மேடைகள் பெயர்ந்து, ஊருணியைச் சுற்றிலும் முள்புதராக மாறிவிட்டது. இதனால் ஊருணி பொலிவிழந்து, பொதுமக்களின் வருகையும் குறைந்தது.

   இதனிடையே, கடந்த முறை திருச்சி வந்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தத் தகவலை அறிந்து உடனடியாக ஊருணியைச் சீரமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, திருவெறும்பூர் ஊராட்சி ஓன்றிய பொது நிதியிலிருந்து (2009-10 ஆம் ஆண்டு நிதியிலிருந்து) | 2 லட்சம் ஒதுக்கப்பட்டு, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

   ஆனால், அதன்பின்னரும் முறையாக ஊருணியைப் பராமரிக்கவில்லை. இதனால், தற்போது ஊருணி தண்ணீர் இல்லாமல் வரண்டு காணப்படுகிறது. மேலும், ஊருணியைச் சுற்றிலும் முள்புதர்கள் வளர்ந்துள்ளன. நடைபாதை மேடைகள் பெயர்ந்தும், பொதுமக்கள் அமருவதற்காக அமைக்கப்பட்ட இருக்கைகள் காணாமலேயே போய்விட்டன.

இதுகுறித்து இந்தப் பகுதி மக்கள் கூறியது:

   தமிழகத்தின் முன்மாதிரி ஊருணியாக அறியப்பட்டுள்ள இந்த ஊருணியை ஊராட்சி நிர்வாகம் சரிவரப் பராமரிப்பதில்லை. இதனால், அலங்கார மின் விளக்குகள் பழுதடைந்து, முள்புதர்கள் சுழ்ந்து, விஷ ஜந்துகள் சுற்றித் திரியும் இடமாக மாறிவிட்டது. மேலும், இந்தப் பகுதி மக்களின் பொழுதுபோக்கு இடமாக விளங்கிய ஊருணி, தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது என்றனர்.

கீழக்குறிச்சி, அரசங்குடி

ஊருணிகள்:   இதேபோல, திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கீழக்குறிச்சி, அரசங்குடி ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட ஊருணிகளும் போதிய பராமரிப்பு இன்றி பழுதடைந்த நிலையிலேயே உள்ளன. இதில், கீழக்குறிச்சி ஊருணியை முதல்வர் மு. கருணாநிதி திறந்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்தது.

   இதுதொடர்பாக கீழக்குறிச்சி மக்கள் கூறியது:

   எல்லக்குடி ஊராட்சியில் இருப்பதைக் காட்டிலும் மோசமான நிலையில் கீழக்குறிச்சி ஊருணி உள்ளது. ஊராட்சி ஓன்றியத்திலிருந்து நிதியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த ஊருணியைக் கட்டியுள்ளனர். கீழக்குறிச்சி ஊருணியின் நடுவில் மின் கம்பம் உள்ளது. மண் சரிவு ஏற்படாமல் இருக்கும் வகையில் ஊருணியைச் சுற்றிலும் கல்கள் பதிக்கப்படவில்லை.

   ஊருணி பராமரிப்புக்காக ஒதுக்கப்படும் நிதியை ஊராட்சி நிர்வாகம் முறையாக செலவிடுகிறதா என்று சம்பந்தப்பட்டவர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும், பொலிவிழந்து காணப்படும் இந்த ஊருணிகளில் பராமரிப்புப் பணிகளை விரைவாக மேற்கொள்வதுடன், தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT