திருச்சி

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஊதியமின்றித் தவிக்கும் ஆசிரியர்கள்

அரியலூர், செப். 19: தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் மூலம் நிகழாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 190 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர் கடந்த 3 மாதங்களாக ஊதியமின்ற

கு. வைத்திலிங்கம்

அரியலூர், செப். 19: தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் மூலம் நிகழாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 190 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர் கடந்த 3 மாதங்களாக ஊதியமின்றித் தவித்து வருகின்றனர்.

     தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், தொடக்க மற்றும் நர்சரி பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிகுலேஷன், மத்திய வாரியப் பள்ளிகள் என சுமார் 51,807 பள்ளிகள் உள்ளன.

    மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் தமிழகத்தில் 2003-04 ஆம் ஆண்டில் செயல்வழிக் கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது,  மாணவர்கள் தாங்களே படங்கள், அட்டைகள் மூலமாகப் பாடங்களைக் கற்றுக்  கொள்ளும் வகையில் 1 முதல் 4 ஆம் வகுப்பு வரை இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறைக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படைப்பாற்றல் கல்வி முறையை அறிமுகப்படுத்தியது அரசு.

     இதைத் தொடர்ந்து, 2009-10 ஆம் கல்வியாண்டில் 9 மற்றும் 10 ஆம்  வகுப்புகளுக்கு தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் (ஆர்.எம்.எஸ்.ஏ.) மூலம் புதிய பாடத்திட்ட முறை அமல்படுத்தப்பட்டது.

    இதேபோல, நிகழாண்டில் தமிழகத்தில் நடுநிலைப் பள்ளிகளிலிருந்து 190 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளுக்கு ஒரு தலைமையாசிரியர், 6 பட்டதாரி ஆசிரியர்கள், 1 இடைநிலை ஆசிரியர் என 8 பேர் வீதம் தமிழகம் முழுவதும் 1520 பேர் இடமாறுதல் பெற்று பணிக்குச் சென்றனர்.

    ஆனால், இவ்வாறு இடமாறுதலில் சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தங்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளதால் தவித்து வருகின்றனர். இவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை எந்தக் கணக்கிலிருந்து எடுப்பது என்ற சரியான வழிகாட்டுதல் வழங்கப்படாததால்தான், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

    பொதுவாக, மத்திய அரசின் திட்டமாகவோ அல்லது மாநில அரசின் திட்டமாகவோ இருந்தால், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு என்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களுக்கு ஊதியம்  வழங்கப்படும். இதற்காக தனியே கணக்கு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும்  தொடங்கப்படும். அதுகுறித்த விவரமும் தெரிவிக்கப்படும்.

   அந்த வகையில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றுபவர்களுக்காக ஊதியம் வழங்குவதற்கு தனியே கணக்கு எண் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், ஊதியத்தை எந்தக் கணக்கிலிருந்து எடுப்பது என்ற சரியான வழிகாட்டுதல் இல்லாததால், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் என 3 மாதங்களுக்குரிய ஊதியம் பெறாமல் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  ஆசிரிய, ஆசிரியைகள் தவித்து வருகின்றனர்.

    தங்களின் நிலை குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அந்தந்த மாவட்டங்களில்  உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர். சென்னையில் உள்ள கல்வித் துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை இது. ஆனால், யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பதால், நாங்கள் 3 மாதங்களாக ஊதியம் பெற முடியாத நிலை இருந்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கோரிக்கையால் பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகின்றன. ஆனால், பல பள்ளிகளில் போதுமான அடிப்படை வசதிகள்கூட இல்லை.

இருக்கும் இடத்தை வைத்துக்கொண்டு பாடம் நடத்த வேண்டியதுள்ளது என்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

    பொதுவாக, ஒரு புதிய திட்டம்  செயல்படுத்தப்பட்டால், அதை முழுமையாக அமல்படுத்துவதற்கு 3 முதல் 4 மாதங்கள் வரை ஆகும். பின்னர், படிப்படியாக எல்லாக் குறைபாடுகளும் சரி  செய்யப்படும். எனவே, ஆசிரியர்கள் பயப்படத் தேவையில்லை என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு விரைவில் ஊதியம் கிடைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலை தொடர்ந்தால், நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை என்கின்றனர் ஊதியம் பெறாமல் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT