திருச்சி

அரியலூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?

அரியலூர், செப். 28: அரியலூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி அதிகம் செய்யப்படும் திருமானூர், தா. பழூர் ஒன்றியங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைவில் திறக்க வேண்டும் என விவசாயிகள் எதி

கு. வைத்திலிங்கம்

அரியலூர், செப். 28: அரியலூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி அதிகம் செய்யப்படும் திருமானூர், தா. பழூர் ஒன்றியங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைவில் திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

 தமிழகத்தின் நெல் களஞ்சியம் என்றழைக்கப்படும் தஞ்சை மாவட்டத்தையொட்டி அமைந்துள்ளது அரியலூர் மாவட்டம். இந்த மாவட்டத்தின் காவிரி பாசன பகுதிகளான திருமானூர், தா. பழூரில் குறுவை பருவத்தில் சுமார் 1,050 ஹெக்டேரிலும், சம்பா பருவத்தில் 5,000 ஹெக்டேரிலும் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 இந்தப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் நந்தியாற்று வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால், இலந்தைக்கூடத்திலுள்ள கண்டராயன்தீர்த்த ஏரி, வேட்டக்குடி ஏரி ஆகியவற்றின் மூலமாகத்தான் பாசன வசதி பெறுகின்றனர்.

 மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடி இருந்தால்தான் நந்தியாறு, புள்ளம்பாடி வாய்க்கால்களில் பாசனத்துக்காக இந்தப் பகுதி விவசாயிகளுக்குத் தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.

 நிகழாண்டு நந்தியாறு, புள்ளம்பாடி வாய்க்கால்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டத்தைக் காரணம் காட்டி தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

 இதனால், பல்வேறு சிரமங்களுக்கிடையே ஆயில் என்ஜின் மோட்டார் பம்ப்செட் மூலம் விவசாயிகள் சாகுபடி மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, தற்போது அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 ஆனால், மாவட்டத்தில் இதுவரை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், விவசாயிகள் நெல்லை விற்க முடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து திருமானூர் பகுதி விவசாயிகள் தெரிவித்தது:

 "திருமானூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் இதுநாள் வரை மீண்டும் திறக்கப்படவில்லை. மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லை.

 தற்போது குறுவை நெல் சாகுபடி அறுவடை முடிந்துள்ள நிலையில், தங்கள் நிலத்தில் சாகுபடி செய்த நெல்லை எங்கு விற்பது என்பது தெரியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

 இதனால், தனியார் நெல் வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு நெல்லை பேரம் பேசி வாங்கிச் சென்று விடுகின்றனர். அவ்வாறு வாங்கிச் செல்லும் நெல்லுக்கு உரிய பணத்தை தருவதிலும் காலதாமதம் செய்கின்றனர்.

 மற்ற மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு முன்னரே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கும். ஆனால், அரியலூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் உள்ளது விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது' என்கின்றனர் திருமானூர் பகுதி விவசாயிகள்.

 எனவே, திருமானூர், திருமழப்பாடி, கல்லூர், கீழக்கொளத்தூர், காமரசவல்லி ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அரசு உடனடியாகத் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

 விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் பலர் இந்த பிரச்னை குறித்து எடுத்துரைத்ததன் பேரில், அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும், எனவே, விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை என்றும், நேரடி நெல் கொள்முதல் மையங்களைத் திறப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் மாவட்ட நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இந்தப் பணியை விரைவில் மேற்கொண்டு, விவசாயிகளிடமிருந்து அரசே நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதே விவசாயிகள் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT