திருச்சி

தொட்டியம் பகுதிகளில் பிரபலமாகி வரும் தேனீ வளர்ப்பு!

திருச்சி, டிச. 6: திருச்சி மாவட்டத்தில் முசிறி, தொட்டியம் பகுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான தேனீ வளர்ப்பு தற்போது பிரபலமடைந்து வருகிறது. மகளிர் முன்னேற்றத்துக்கான ஒரு வகையாக, கவனத்துடன் பார்

சா. ஜெயப்பிரகாஷ்

திருச்சி, டிச. 6: திருச்சி மாவட்டத்தில் முசிறி, தொட்டியம் பகுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான தேனீ வளர்ப்பு தற்போது பிரபலமடைந்து வருகிறது.

மகளிர் முன்னேற்றத்துக்கான ஒரு வகையாக, கவனத்துடன் பார்க்கப்படுவது "சுய உதவிக் குழுக்கள்'. பல இடங்களில் இந்தக் குழுக்கள் அரசியல் லாபத்துக்காகவே இயக்கப்பட்டாலும் கூட, அங்கொன்றும் இங்கொன்றுமாக சில குழுக்கள் சுய தொழில் முன்னேற்றத்துக்கான பயிற்சிகளில் ஈடுபட்டிருப்பது சாதகமான அம்சம்.

இந்த வகையில்தான், திருச்சி மாவட்டத்தில் கொளக்குடிப்பட்டியில் தேனீ வளர்ப்பு பிரபலமாகியிருக்கிறது.

சுறுசுறுப்புக்குப் பெயர்போன தேனீக்கள்தான், அதிஅற்புத மருந்தாம் தேனைச் சேகரித்துத் தருகின்றன. ஏற்கெனவே பல இடங்களில் தேனீ வளர்ப்பு தொடங்கி விட்டாலும்கூட, இவற்றை "வளர்க்க' முடியுமா? கொட்டாதா? என்ற கேள்வி இப்போதும் பெரும்பாலானோரிடம் இருக்கிறது.

"நாம் சீண்டாமல் எந்த பூச்சியினங்களும் நம்மைச் சீண்டாது' என்ற எளிய சூத்திரம்தான் இந்தத் தேனீயிடமும் பயன்படுத்தப்படுகிறது. மதுரையிலிருந்து 10 ஆயிரம் தேனீக்களை பெட்டியில் அடைத்து, உள்ளேயே செயற்கைக் கூட்டை உருவாக்கித் தருகிறார்கள்.

பக்குவமாக இவற்றைப் பாதுகாத்து, தேனை எடுத்து பலன்பெறுவதுதான் இங்கு சுயதொழில் பயிற்சி. கொளக்குடிப்பட்டியில் அண்மையில் தொடங்கப்பட்ட "கிராமாலயா தொழில் முனைவோர் கூட்டமைப்பு' இந்தப் பயிற்சியை மகளிர் தொழில் முனைவோருக்கு அளித்து, அவர்களுக்கான சிறிய முதலீட்டுக்கு கடன் வழங்கி, தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கவும் திட்டமிட்டிருக்கிறது.

"ரூ. 10 ஆயிரத்துக்கு ஒரு பெட்டியை வாங்கி வயல்வெளிகளுக்கு அருகே வைத்துவிட்டால், 10 நாள்களுக்குப் பிறகு, வாரம் ஒரு முறைகூட தொடர்ந்து மகசூல் கிடைக்கும்' என்கிறார் இந்தக் கூட்டமைப்பின் இயக்குநர் டி.என். நளினி. தேனீ வளர்ப்பு குறித்து அவர் மேலும் கூறியது:

"விவசாயிகளின் நண்பன் மண்புழு என்பார்கள். மண்புழுவுக்கு இணையான உதவியைத் தேனீக்களும் செய்கின்றன. மகரந்தச் சேர்க்கைதான் அது. காடுகளில், மலைகளில் பல வகையான- பெயர் தெரியாத- மருத்துவ குணம் பெற்ற பூக்களில் இருந்து சேகரிக்கப்படும் தேன் புகழ் பெற்றது.

அதைப்போலவே, தற்போது, வகைவகையான பூக்கள் நிறைந்த பகுதிகளில் தனித்தனியே பெயர் வைத்து தேனைச் சேகரிப்பது அறிமுகமாகியிருக்கிறது. குறிப்பாக, வாழை அதிகம் பயிரிடப்படும் தொட்டியம், முசிறி பகுதிகளில் தேனீக்களை வளர்க்கும்போது, வாழைத் தேன் கிடைக்கும்.

ஒரேயொரு ராணித் தேனீ, சுமார் 100 ஆண் தேனீக்கள் இவற்றுடன் தகவல் தொடர்புத் தேனீக்களும், வேலையாள் தேனீக்களும் நிறைந்ததுதான் தேனீக் குடும்பம்.

தகவல் தொடர்புத் தேனீக்கள்தான் எங்கே தேன் நிறைந்த பூக்கள் இருக்கின்றன என்பதைப் பார்த்து வந்து வேலையாள் தேனீக்களிடம் தகவல் சொல்லும். வேலையாள் தேனீக்கள்தான் தேன் சேகரிக்கும் பணியைச் செய்கின்றன.

பொதுவாக தேனீக்களின் வாழ்நாள் 2 மாதங்கள். இதில் குறிப்பிட வேண்டிய அம்சம், ராணித் தேனீ தனது காலம் முடியும்போது, இன்னொரு தேனீயை ராணித் தேனீயாக உருவாக்கிவிடும் என்பதுதான். ராயல் ஜெல்லி என்றழைக்கப்படும், ஒரு வகையான உணவு வகை தேனீக் கூட்டுக்குள்ளேயே உற்பத்தியாகிறது. இந்த உணவை உள்கொண்டு வளர்பவையே கொஞ்சம் பெரிய அளவிலான ராணித் தேனீ. இதுவரை 360 பேருக்கு பயிற்சி அளித்திருக்கிறோம். ஓராண்டுக்குள் 1000 பேருக்கு பயிற்சி வழங்குவது மட்டுமல்ல, அவர்களுக்கான கடன் வசதியையும் செய்து கொடுத்து, தேன் விற்பனைக்கான ஏற்பாட்டையும் செய்து தரவுள்ளோம்.

இதற்காக, முசிறியிலிருந்து தொட்டியம் வழியாக நாமக்கல் வரை நெடுஞ்சாலையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளை விற்பனை செய்யும் கடைகளைத் திறக்க இருக்கிறோம்' என்கிறார் நளினி.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை பெய்யும் காலம் என்பதால், இந்த இரு மாதங்களில் தேனீக்கள் கூட்டைவிட்டு வெளியே வருவதில்லை. தேனீக்களைக் கண்டால் நடுங்கி ஓடுகிறோம் நாம், மழைத் துளியைக் கண்டால் தேனீக்கள் ஓடி ஒளிகின்றனவாம்.

இதனால், இந்தக் காலகட்டத்தில் தேனீப் பெட்டிக்குள் இரு கொட்டாங்கச்சியில் சர்க்கரைத் தண்ணீரை ஊற்றி வைத்துவிடுகிறார்கள். அவற்றைக் குடித்துவிட்டு உள்ளேயே வாழ்கின்றன தேனீக்கள்.

தேன் நிறைய சேர்ந்துவிட்ட பிறகு, தேனை எடுக்க ஒரு எளிய இயந்திரமும் உள்ளது. தேனீக்களை விரட்ட சிறிய புகை அடிப்பானும் இருக்கிறது. தேனீக்கள் குறித்த இந்த அரிய தகவல்கள், மிகவிரைவில் மகளிர் முன்னேற்றத்திலும் அரிதான ஒரு நிலையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT