திருச்சி

திருச்சியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்: அரசாணை வெளியீடு

திருச்சி, பிப். 7: திருச்சியில் ரூ. 22. 64 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல் வழங்கி, தமிழ்நாடு அரசின் உள்துறை அமைச்சகம் பிப். 1-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது

சா. ஜெயப்பிரகாஷ்

திருச்சி, பிப். 7: திருச்சியில் ரூ. 22. 64 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல் வழங்கி, தமிழ்நாடு அரசின் உள்துறை அமைச்சகம் பிப். 1-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது.

    சுதந்திரத்துக்கும் முந்தைய நீதிமன்ற வரலாற்றில் இடம்பெற்று நூற்றாண்டையும் கடந்த திருச்சி நீதிமன்றம் 18 நீதிமன்றங்களுக்கான கட்டடங்களுடன் புதிய வளாகத்தைப் பெறப் போகிறது.

    திருச்சி மாவட்டத்தில் உய்யக்கொண்டான் ஆற்றுக்கு தெற்குக் கரையில் மாவட்ட நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. 1820-ம் ஆண்டில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான, பழைமையான கட்டடத்தில், ஏறத்தாழ 1889-90-களில் நீதிமன்றம் தொடங்கப்பட்டிக்கிறது.

    இப்போது, இந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிமன்றம், முதலாவது மாவட்ட கூடுதல் நீதிமன்றம், இரு விரைவு நீதிமன்றங்கள், மகளிர் நீதிமன்றம், தொழிலாளர் நீதிமன்றம், தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றம், 6 குற்றவியல் நடுவர் மன்றங்கள், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், 3 கூடுதல் உரிமையியல் நீதிமன்றங்கள், முதன்மை சார்பு நீதிமன்றம், 3 கூடுதல் சார்பு நீதிமன்றங்கள் என 22 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இத்துடன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அலுவலகம், புறக்காவல் நிலையம், வங்கிக் கிளை, வழக்குரைஞர்கள் சங்க அலுவலகம் போன்றவையும் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட முதன்மை நீதிமன்றம் மட்டுமே போதிய வசதிகளுடன் செயல்பட்டு வரும் பழைமையான நீதிமன்றம். இதுதவிர, புதிய கட்டடங்களில் செயல்பட்டு வருபவை விரைவு நீதிமன்றங்களும், மகளிர் நீதிமன்றமும் மட்டுமே.

   மற்ற நீதிமன்றங்களில் பெரும்பாலானவை ஓய்வறைகளாக இருந்த இடங்களும், ஆவணக் காப்பக அறைகளாக இருந்த இடங்களும்தான். வராண்டாவில் வழக்குரைஞர் சங்க அலுவலகம். இவற்றுடன், நாளொன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கான வாகன நிறுத்துமிடம், கழிப்பறைகள் எதுவும் இல்லை.

    மேலும், தலைமை அஞ்சல் நிலையம் அருகே தனியார் கட்டடத்தில் வாடகைக்குச் செயல்பட்டு வருகிறது மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம். இந்தக் குறைகளையெல்லாவற்றையும் சரி செய்ய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் "பழைமையானதே'.

     ஆர்ப்பாட்டங்கள், நீதிமன்றப் புறக்கணிப்பு, மனுவே திரும்பி வந்தது என பல நிகழ்வுகள் நடந்து முடிந்திருக்கின்றன. ஒருவழியாக ரூ. 22.64 கோடியில் ஒருங்கிணைந்த வளாகம் அமைப்பதற்கான நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல் வழங்கி மாநில அரசின் உள்துறை அமைச்சகத்தால் பிப். 1-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:

   18 நீதிமன்றங்களுக்கு "ஹால்கள்'. இதற்கான ஒருங்கிணைந்த கட்டடங்களுக்கு ரூ. 19,82,69,095. வாகனக் கூடங்களுக்கு (தலா ரூ. 14,30,355 வீதம் இரண்டு) ரூ. 28,60,710. இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்கள் (தலா ரூ. 6,05,874 வீதம் 4)- ரூ. 24,23,484.

    தொழிலாளர் நீதிமன்றத்திலுள்ள தலைமை தாங்கும் அதிகாரிக்கு (நீதிபதி) குடியிருப்பு கட்ட ரூ. 43,22,556. மகளிர் நீதிமன்ற நீதிபதிக்கு குடியிருப்பு கட்ட ரூ. 43,22,556. மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதிக்கு குடியிருப்பு கட்ட ரூ. 32,92,933. இந்த குடியிருப்புகளுக்கான வாகனக் கூடம் கட்ட ரூ. 2,04,827.

    மொத்தத்தில், ரூ. 21.56 கோடியுடன் 5 சத கூடுதல் தொகை சேர்த்து ரூ. 22.64 கோடிக்கு நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருச்சி வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஏ. சீனிவாசன் கூறியது:

   "பல்லாண்டு காலமாக புதிய நீதிமன்ற வளாகம் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு, இப்போது அரசாணை வெளியிடப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. ஓராண்டுக்குள் இந்தப் பணிகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

  அண்மையில் திருச்சி வந்த முதல்வர் கருணாநிதியிடம் அரசாணை வெளியிடக் கோரினோம். உடனடியாக அமைச்சர் துரைமுருகனை அழைத்து, எங்கள் கோரிக்கை மனுவை அளித்து விரைவில் அரசாணை வெளியிட அறிவுறுத்தினார் முதல்வர்.

    வரும் பிப். 19-ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்' என்றார் சீனிவாசன்.

    எந்தெந்த நீதிமன்றங்களை புதிய வளாகத்தில் அமைப்பது என்ற விவரம் இறுதியாகவில்லை எனத் தெரிகிறது.

  மாவட்ட முதன்மை நீதிமன்றம் செயல்படும் பழைமையான கட்டடம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு விட்டதால், இடிக்க வாய்ப்பில்லை. அதேநேரத்தில் அங்கிருந்து நீதிமன்றம் இடம் மாறவும் வாய்ப்பில்லை.

   வழக்குரைஞர் சங்க அலுவலகம், வழக்காடிகளுக்கான கழிப்பறைகள் பற்றிய விவரம் எதுவும் அரசாணையில் இல்லை. திருச்சி எம்பி ப. குமார் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்குவதாகக் கூறிய நிதி- அதன் பணி விவரம் எதுவும் தெரியவில்லை.   எப்படியோ முதலில் வரட்டும் ஒருங்கிணைந்த வளாகம். அப்புறம் தேவையானவற்றை சரி செய்துகொள்ளலாம் என்கின்றனர் வழக்குரைஞர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT