முகப்பு
திருச்சி

காவலர் பற்றாக்குறையில் துறையூர் காவல் நிலையம்

துறையூர், ஜன. 12: திருச்சி மாவட்டம், துறையூர் காவல் நிலையத்தில் காவலர் பற்றாக்குறையால், பணிச் சுமை அதிகரித்துள்ளதாக காவலர்கள் தெரிவிக்கின்றனர்.   முசிறி கோட்டத்தில் முசிறி, காட்டுப்புத்தூர், தொட்டியம்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:23 AM
பகிர்:

துறையூர், ஜன. 12: திருச்சி மாவட்டம், துறையூர் காவல் நிலையத்தில் காவலர் பற்றாக்குறையால், பணிச் சுமை அதிகரித்துள்ளதாக காவலர்கள் தெரிவிக்கின்றனர்.

  முசிறி கோட்டத்தில் முசிறி, காட்டுப்புத்தூர், தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, துறையூர், உப்பிலியபுரம் ஆகிய இடங்களில் காவல் நிலையங்கள் உள்ளன.

  துறையூர் காவல் நிலையத்துக்கு பரப்பளவு, மக்கள்தொகை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஆய்வாளர் - 1, உதவி ஆய்வாளர் - 2 உள்பட 45 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் முசிறி டிஎஸ்பி அலுவலகத்துக்கும், ஒருவர் மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கும், ஒருவர் ஆயுதப்படை அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.

Advertisement

  இதுதவிர, மருத்துவமனைகளில் விபத்துச் சான்று பெறுவதற்கு துறையூர், திருச்சி மாவட்ட நீதிமன்றப் பணிக்கு, நீதிமன்ற அழைப்பாணையை சம்பந்தப்பட்டவர்களிடம் சார்வு செய்வதற்கு என்று தலா ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  எஞ்சி இருப்பவர்களும் விஐபி பாதுகாப்புக்காக அடிக்கடி அழைக்கப்படுவதால், இந்தக் காவல் நிலையத்தில் காவலர் நிலையில் 5 அல்லது 6 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். இதனால்,  எந்த வேலையையும், சரிவர முடிக்க முடியாமல் போலீஸôர் திணறி வருகின்றனர்.

  துறையூர் பேருந்து நிலையத்தில் உள்ள காவலர் தகவல் மையம் பூட்டியே உள்ளது. கடந்த ஆண்டில் பெறப்பட்ட மனுக்கள்  அதிகமாக விசாரித்து தீர்க்கப்பட்டாலும்கூட, தவிர்க்க முடியாமல்  குறைவான எண்ணிக்கையில் 577 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அடையாளம் தெரியாத நபர்களால் செய்யப்பட்ட திருட்டு வழக்குகளும், விபத்து வழக்குகள் மற்றும்  காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகளும் உள்ளடங்கும்.

  ஆகவே, இதுபோன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களைத்  தேடிக் கண்டுபிடிக்கும் பொறுப்பும் இங்கு பணியாற்றும்  போலீஸôருக்கு உண்டு.

   நகரில் முக்கிய பிரச்னையாக இருக்கிற போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பாலக்கரையில் தம்மம்பட்டி சாலை திருப்பம், பெரம்பலூர் சாலை திருப்பம், பழைய சிலோன் அலுவலகம், முசிறி பிரிவு சாலை, பேருந்து நிலையம், அன்னை மருத்துவமனை உள்ளிட்ட 11 இடங்களில் போக்குவரத்து போலீஸôரை நியமிக்க வேண்டிய அவசியம் இருந்தும், பெயரளவில் மருத்துவமனை சாலை, ஆத்தூர் சாலை சந்திப்பில் மட்டும் ஒரு பெண் போலீஸôர் நிறுத்தப்பட்டுள்ளார். இதனால், மாநகரில் நிலவும் அளவுக்கு ஏற்படுகிற போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க முடியவில்லை.

  மேலும், இங்குள்ள காவல் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லை.  காவலர் எண்ணிக்கைக்கு ஏற்ப காவலர் குடியிருப்பில் வீடுகளோ  அல்லது இருக்கிற வீடுகளுக்கு செல்ல சாலை வசதியோ, அடிப்படை வசதிகளோ இல்லை. நகராட்சி நிர்வாகம் இந்தப் பகுதியில் துப்புரவுப் பணியைச் செய்வதில்லை.

  துறையூர் நகரில் நிலவும் அதிக வாடகை, பணியாளர்கள் பற்றாக்குறையால் நிலவும் பணிச்சுமை காரணமாக, சுமார் 6 பேர் பணியிட மாற்றம் கோரி மாவட்டக் காவல் அலுவலகத்தில்  விண்ணப்பித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

  எனவே, துறையூருக்கு ஒதுக்கப்பட்ட காவலர்களை துறையூரிலே பணி செய்யவும், 1961-ல் உருவாக்கப்பட்ட காவலர் குடியிருப்பை இடித்துவிட்டு புதிய காவலர் குடியிருப்பை அடிப்படை வசதிகளுடன் ஏற்படுத்தவும், மாவட்டக் காவல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இங்கு பணியாற்றும் காவலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.