முகப்பு
திருச்சி

நிதி ஒதுக்கப்பட்டும் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டப் பணிகள்

மானாமதுரை, ஜூலை 8: அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியத்தில் சின்ன புதுக்கோட்டைக் கிராமத்தில் சுடுகாடு மற்றும் கால்வாய் பாலம் அமைக்கும் ப

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:07 PM
பகிர்:

மானாமதுரை, ஜூலை 8: அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியத்தில் சின்ன புதுக்கோட்டைக் கிராமத்தில் சுடுகாடு மற்றும் கால்வாய் பாலம் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

   மானாமதுரை ஒன்றியத்தைச் சேர்ந்த தெ.புதுக்கோட்டை ஊராட்சி சின்ன புதுக்கோட்டைக் கிராமத்தில், சுடுகாடு மற்றும் பிராமணக்குறிச்சி கால்வாயைக் கடந்து செல்ல கால்வாய் பாலம் அமைக்கும் பணிக்கு, கடந்த 2008-ம் ஆண்டில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

   இதில், சுடுகாடு அமைக்க ரூ. 5 லட்சமும், பாலம் அமைக்க ரூ. 3 லட்சமும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, சுடுகாடு அமைக்கும் திட்டம் தொடங்கி நடைபெற்றது. ஆனால், திடீரென இப்பணிகளை நிறுத்துமாறு வருவாய்த் துறை கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

   சுடுகாடு அமைக்கப்பட உள்ள இடம் களம்புறப்போக்கு என, வருவாய்த் துறைப் பதிவேட்டில் உள்ளது. இதை, வகைமாற்றம் செய்து திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

   எனவே, சுடுகாடு அமைக்கும் பணியும், அதைத் தொடர்ந்து கால்வாய் பாலம் அமைக்கும் பணியும் நிறுத்தப்பட்டன. பின்னர், அந்த இடத்தை வகைமாற்றம் செய்திட, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் ஆகியோர் மாவட்ட வருவாய்த் துறை நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்தனர். ஆனால், இன்று வரை அந்த இடம் வகைமாற்றம் செய்யப்படாததால், கடந்த 2008-ம் ஆண்டு முதல் சின்ன புதுக்கோட்டைக் கிராமத்தில் சுடுகாடு மற்றும் கால்வாய் அமைக்கும் திட்டம் நடைபெறாமல் முடங்கிப்போய் கிடக்கின்றன. மேலும், அரசு நிதியும் வீணாகிக் கொண்டிருக்கிறது.

  அந்த இடத்தை வகைமாற்றம் செய்ய பலமுறை வலியுறுத்தப்பட்டும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, அக்கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

   இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன், இக்கிராமத்துக்கு வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வந்த மானாமதுரை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. குணசேகரனிடம் சின்னபுதுக்கோட்டைக் கிராம மக்கள் இப்பிரச்னையை மனுவாக எழுதிக் கொடுத்து நிலைமையையும் விளக்கிக் கூறினர். அவர், இப்பிரச்னைத் தொடர்பாக அதிகாரிகளிடம் பேசித் தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளார்.

   எனவே, மாவட்ட வருவாய்த் துறை நிர்வாகம் இதற்காக உடனடியாக நடவடிக்கை எடுத்து, சுடுகாடு மற்றும் கால்வாய் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, அக்கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →