முகப்பு
திருச்சி

பெரம்பலூரில் புறவழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படுமா?

பெரம்பலூர், ஜூலை 16: பெரம்பலூர் நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட புறவழிச் சாலைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:12 PM
பகிர்:

பெரம்பலூர், ஜூலை 16: பெரம்பலூர் நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட புறவழிச் சாலைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

 பெரம்பலூர் நகரில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நகரின் முக்கிய சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால், அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன.

 நாமக்கல், சேலம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, அரியலூர், தஞ்சாவூர் வழித்தடங்களுக்குச் சென்று வரும் கனரக வாகனங்கள், பெரம்பலூர் நகரின் முக்கியச் சாலையான காமராஜர் வளைவு எதிரில் உள்ள சாலை வழியாகத்தான் சென்று வருகின்றன.

 அதேபோல, அரியலூர் மாவட்டத்தில் உள்ள 9 சிமென்ட் ஆலைகளில் இருந்து, துறையூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிமென்ட் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரிகள், பெரம்பலூர் நகரின் மற்றொரு முக்கியச் சாலையான கடைவீதி வழியாகத்தான் சென்று வருகின்றன.

 மேலும், சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து, அரியலூர் சிமென்ட் தொழில்சாலைகளுக்கு மூலப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களும், இந்த வழித் தடத்திலேயே இயக்கப்படுகின்றன.

 பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம், பருத்தி, மக்காசோளம், மஞ்சள் உள்ளிட்ட விளை பொருள்கள், திருச்சி, நாமக்கல், துறையூர், கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் உள்ள விற்பனை மையங்களுக்கும், தொழில் சாலைகளுக்கும் லாரிகளில் இந்தச் சாலைகளின் வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகின்றன.

 இதனால், பெரம்பலூர் நகரின் அனைத்து வழித் தடங்களிலும் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. மேலும், புதிதாக அமைக்கப்படும் சாலைகளும் அடிக்கடி பழுதடைந்து விடுகின்றன.

 இந்த நிலையில், பெரம்பலூரில் புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என விவசாய சங்க பிரதிநிதிகளும், சமூகநல ஆர்வலர்களும் நீண்ட நாள்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

 இதையடுத்து, தமிழக அரசின் உத்தரவுபடி, மாவட்ட நிர்வாகம் சார்பில் புறவழிச் சாலை அமைப்பதற்கான வழித் தடம் தேர்வு செய்யப்பட்டது.

 மேலும், ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 12.40 கோடியில் புறவழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

 அதற்காக தனியாருக்குச் சொந்தமான 56 ஹெக்டேர் விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்பட்டன.

 பின்னர், முதல் கட்டமாக, 5.250 கிலோ மீட்டர் நீளத்துக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையிலிருந்து, எளம்பலூர், கோனேரிப்பாளையம் வரை 7 மீட்டர் அகலம் கொண்ட சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

 இதையொட்டி, கடந்த 27.02.2011-ல் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் அப்போதைய நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ. சாமிநாதன், புறவழிச் சாலை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டி, உடனடியாக இந்தத் திட்டம் நிறைவடையும் என்றார்.

 அடிக்கல் நாட்டப்பட்ட ஒருசில நாள்களிலேயே தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை.

 தேர்தல் முடிந்து இரு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், புறவழிச் சாலைத் திட்டப் பணிகள் தொடங்குவதற்கான எந்தவித அறிகுறிகளும் இல்லை.

 இதனால், பெரம்பலூரில் புறவழிச் சாலைத் திட்டம் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் இந்தப் பகுதி மக்களிடையே நிவவுகிறது.

 இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் அ. வேணுகோபால் கூறியது:

 பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு எற்ப போதுமான சாலை வசதிகள் இல்லை.

 தற்போது, புதை சாக்கடை திட்டப் பணிகளுக்காக நகரின் பிரதான சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

 இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனர். இதைத் தவிர்க்க, அடிக்கல் நாட்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள புறவழிச் சாலைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →