முகப்பு
திருச்சி

செங்கல் கூட்டுறவுச் சங்க தொழிலாளர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கிடைக்குமா?

லால்குடி, ஜூலை 18: காமராஜர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட அரிஜன செங்கல் கூட்டுறவு சங்கத் தொழிலாளர்கள் இன்று வரையிலும் கான்கிரீட் வீடுகள் இன்றி குடிசைகளில் வசித்து வருகின்றனர்.     திருச்சி மாவட்டம்,

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:13 PM
பகிர்:

லால்குடி, ஜூலை 18: காமராஜர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட அரிஜன செங்கல் கூட்டுறவு சங்கத் தொழிலாளர்கள் இன்று வரையிலும் கான்கிரீட் வீடுகள் இன்றி குடிசைகளில் வசித்து வருகின்றனர்.

    திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், அன்பில் அருகேயுள்ள வெங்கடஜலபுரம் கிராமத்தில் உள்ளது அரிஜன செங்கல் கூட்டுறவுச் சங்கம்.

    1947 முதல் 2005-ம் ஆண்டு வரை டால்மியா சிமென்ட் தேசிய தொழிலாளர் சங்கத் தலைவராகவும், 1957- 1962-ம் ஆண்டு வரை பெரம்பலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்த பழனியாண்டியின் முயற்சியால், அப்போதைய முதல்வர் காமராஜரால் தொடங்கப்பட்டதுதான் இந்தச் செங்கல் கூட்டுறவு சங்கம்.

    1960-ல் திருச்சி அருணாச்சல மன்றத்துக்கு வந்த அப்போதைய முதல்வர் காமராஜர், புள்ளம்பாடி வாய்க்காலைப் பார்வையிட சென்ற போது, இந்தப் பகுதி செங்கல் தொழில்சாலைகளை பார்வையிட்டார்.

  தொடர்ந்து, அங்கு செங்கல் கூட்டுறவு சங்கம் தொடங்கும் வகையில் அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் தங்களது பங்குத் தொகையாக தலா ரூ. 5 வீதம் 12 உறுப்பினர்கள் ரூ. 60 அளித்தனர். அத்துடன், தமிழக அரசின் பங்குத் தொகையான ரூ. 20,000-ஐயும் சேர்த்து இந்தச் செங்கல் கூட்டுறவுச் சங்கம் தொடங்கப்பட்டது. இப்போது, இந்தச் செங்கல் தொழில்சாலையில் 250 உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் இந்தச் செங்கல் தொழில்சாலை ரூ. 15 லட்சம் லாபம் ஈட்டியுள்ளது.

   மேலும், இப்போது இந்தத் தொழில்சாலைக்குச் சொந்தமாக 33 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், 20 ஏக்கரில் செங்கல் தொழில்சாலையும், ஒரு பகுதியில் தொழிலாளர்கள் குடிசை கட்டியும் வசித்து வருகின்றனர். மீதமுள்ள 13 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

   ஜயங்கொண்டம், அரியலூர், திருக்காட்டுப்பள்ளி போன்ற பகுதிகளிலிருந்து முன்பு இந்தத் தொழில்சாலைக்கு தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். இப்போது, இங்கு 40 குடும்பங்களைச் சேர்ந்த 140-க்கும் அதிகமானோர் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்குக் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. தலித் மட்டுமன்றி பிற சமூதாயத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு தங்கி வேலை செய்து வருகின்றனர். ஜாதி பேதமின்றி இவர்கள் அனைவரும் தொழில் மட்டுமன்றி குடும்ப வைபவங்களிலும் கலந்து கொள்கின்றனர்.

   ஆனால், பிரதான பிரச்னையாக இருப்பது கான்கிரீட் வீடு இல்லாதது மட்டுமே என்கின்றனர் அவர்கள்.

    இதுதொடர்பாக செங்கல் கூட்டுறவு சங்கத்தின் தனி அலுவலர் கதிர்வேல் கூறியது:

   தொழில் வணிகத் துறையின் கீழ் செயல்படும் இந்தச் செங்கல் கூட்டுறவுச் சங்கம் போல மற்ற மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டன. ஆனால், திட்டமிட்ட செயல்பாடு இல்லாததால் பல மாவட்டங்களில் இப்போது செங்கல் தொழில்சாலை இல்லை.

   நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள அலஞ்சியம் ஆகிய பகுதிகளில் மட்டுமே செயல்படுகின்றன. ஆனால், அவை இரண்டும் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தச் சங்கம் மட்டும்தான் லாபத்துடன் இயங்கி வருகிறது.

    இந்தக் கூட்டுறவு சங்கத்தைத் தொடர்ந்து, இப்போது 50-க்கும் அதிகமான தனியார் செங்கல் சூளைகள் இங்கு இயங்கி வருகின்றன. செங்கல் விலையை நிர்ணயிக்கும் தகுதியை நாங்கள் பெற்றுள்ளோம். மாதம் ரூ. 50,000 வரை வாட் வரியை அரசுக்குச் செலுத்துகிறோம்.

    இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தாட்கோ மூலமாகவோ அல்லது அரசோ நேரடியாக அவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித் தர வேண்டும்' என்றார் அவர்.

   எனவே, 41 ஆண்டு காலமாக கான்கிரீட் வீடு வேண்டும் என்ற தங்களது கனவைத் தமிழக அரசு நிறைவேற்றுமா? என்பதே தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு.

முழு கட்டுரையைப் படிக்க →