துறையூரில் 3 மாதங்களாக ஊதியமின்றி கோயில் ஊழியர்கள் அவதி
துறையூர், மே 5: திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள தமிழக அரசின் இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் அவர்கள் பெரிதும் அவதி
துறையூர், மே 5: திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள தமிழக அரசின் இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
துறையூரில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான ஸ்ரீ நந்திகேசுவரர் கோயில், பெருமாள் மலை ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், அடிவாரத்தில் உள்ள கோவிந்தராஜபெருமாள் கோயில், வேணுகோபாலசுவாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்களை உள்ளடக்கிய அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் நிர்வாக அலுவலகம் ஸ்ரீநந்திகேசுவரர் ஆலய வளாகத்தில் செயல்படுகிறது.
இந்தக் கோயில்களில் அர்ச்சகர், மெய்க்காவல், மடப்பள்ளி, நிர்வாக அலுவலகம் ஆகியவற்றில் 10-க்கும் மேல்பட்டோர் கடைநிலை ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சிலர் நிரந்தர ஊழியர்களாகவும், சிலர் தாற்காலிக ஊழியர்களாக நாளொன்றுக்கு ரூ. 75 ஊதியத்திலும் பணியாற்றுகின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து நிர்வாக அலுவலகத்தில் ஊழியர்கள் விசாரித்த போது, பணம் இல்லாததால் ஊதியம் வழங்கவில்லை என்றார்களாம்.
கடந்த ஆண்டு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் மலையில் நடைபெற்ற உத்சவ விழாவுக்காக கடைகள் வைக்க ஏலம் விட்டதிலும், கோயில் கால்நடைகளை ஏலம் விட்டதிலும் கிடைத்த தொகை, உண்டியல் மூலம் கிடைத்த தொகை, சுவாமி தரிசனத்துக்காக அனுமதிச் சீட்டு விற்பனையில் கிடைத்த தொகை என ரூ. 10 லட்சத்துக்கும் மேலாக வருவாய் ஈட்டப்பட்ட நிலையில், வங்கிக் கணக்கில் ஊதியம் வழங்கும் அளவுக்குக்கூட பணம் இல்லை என்று கூறப்படுவதை கோயில் ஊழியர்கள் ஏற்க மறுக்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதுகுறித்து ஊழியர்கள் அனைவரும் அறங்காவலர் குழு மூலம் ஸ்ரீரங்கம் உதவி ஆணையருக்கு கோரிக்கை மனு அனுப்பியும் பலனில்லையாம். மேலும், நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய உதவி ஆணையர் பாலசுப்பிரமணியம் பணி ஓய்வு பெற்று விட்டாராம். புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆணையர் இவர்கள் கோரிக்கை மனு குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லையாம்.
பொதுவாக, அறங்காவலர் குழுவும், கோயில் நிர்வாக அலுவலரும் இணைந்துதான் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நிர்வாக அலுவலர் அருண் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவ விடுப்பில் சென்றுள்ள நிலையில், ஏற்கெனவே 3 மாத ஊதியம் நிலுவையோடு, மே மாத ஊதியமும் சேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் கோயில் ஊழியர்கள் உள்ளனர். சொற்ப ஊதியத்தில் வாழ்க்கையை நடத்தும் இவர்களுக்கு அந்த ஊதியமும் கிடைக்காததால், அவர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, இந்தக் கோயில்களில் 3 மாதங்களாக ஊதியம் பெறாமல் உள்ள அனைவருக்கும் மே மாத ஊதியத்துடன், நிலுவையில் உள்ள ஊதியத்தையும் சேர்த்து வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர்
எதிர்பார்க்கின்றனர்.