திருச்சி

திருச்சி அருகே கோயிலில் 3 வெண்கலச் சிலைகள் திருட்டு

தினமணி

லால்குடி, நவ 19: திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேசுவரர் கோயிலின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 3 வெண்கலச் சிலைகள் திருடப்பட்டன. மேலும், கோயில் உண்டியலும் உடைக்கப்பட்டுள்ளது.

 லால்குடி அருகேயுள்ள புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊட்டத்தூர் ஊராட்சியில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட- மிகவும் பழைமை வாய்ந்த அருள்மிகு சுத்தரத்தினேசுவரர் கோயில் உள்ளது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோயிலின் சுற்றுச்சுவர் சுமார் 50 அடி உயரம் கொண்டது.

 ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் "முள் படுகளம்' திருவிழா இங்கு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் சுற்றுப்பகுதியிலுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பார்கள். இத்தகைய பிரசித்திப் பெற்ற கோயிலின் அர்ச்சகர்கள், இதே கிராமத்தைச் சேர்ந்த ராமநாதன் (65), இவரது மகன் நடராஜன் (45) இருவரும் சனிக்கிழமை காலை 7 மணிக்கு வழக்கம்போல கோயிலைத் திறந்து உள்ளே சென்றனர். உள்பிரகார கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து மேலும் உள்ளே சென்று பார்த்தனர். கோயிலின் மையப் பகுதியிலிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு சில்லறைகள் சிதறிக் கிடந்தன. கருவறையின் பின்புறம் இருந்த அம்பாளுடன் இணைந்த ஸ்கந்தர், சண்டிகேசுவர், விநாயகர் ஆகிய 3 வெண்கலச் சிலைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இவை ஒவ்வொன்றும் ஏறத்தாழ இரண்டரை அடி உயரம் கொண்டவை.

 இதையடுத்து உள்ளூர் பிரமுகர்களுக்கும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து சிறுகனூர் போலீஸôர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ஜாக் வரவழைக்கப்பட்டது. விரல் ரேகை நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.

 16 நாள்களில்...

 புள்ளம்பாடியில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள 3 சிலைகள் கடந்த 3-ம் தேதி திருடு போனது. தற்போது 16 நாள்களில் இந்தத் திருட்டு நிகழ்ந்துள்ளது. இதே கோயிலில் 2002-ம் ஆண்டில் திருடுபோய், மீட்கப்பட்ட சிலை ஒன்று நீதிமன்றத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்!

நிஜ்ஜார் கொலை வழக்கு: நீதிமன்றத்துக்கு முன் குவிந்த சீக்கியர்கள்!

சீரியலிலிருந்து நானாக விலகவில்லை... பிரியங்கா நல்காரி உருக்கம்

நிறைவடையும் பிரபல சீரியல்....இதிகாசத் தொடர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT