திருச்சி

துணைத் தலைவர் பதவிகளைக் கைப்பற்ற திமுக, அதிமுக தீவிரம்

அரியலூர், அக். 24: அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரு நகர்மன்றத் துணைத் தலைவர் பதவிகளில் திமுக அரியலூரையும், அதிமுக ஜயங்கொண்டத்தையும் கைப்பற்றும் வாய்ப்புள்ளது.  அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜயங்கொண்டம

கு. வைத்திலிங்கம்

அரியலூர், அக். 24: அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரு நகர்மன்றத் துணைத் தலைவர் பதவிகளில் திமுக அரியலூரையும், அதிமுக ஜயங்கொண்டத்தையும் கைப்பற்றும் வாய்ப்புள்ளது.

 அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜயங்கொண்டம் ஆகிய நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகளுக்கு அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அரியலூர், ஜயங்கொண்டம் ஆகிய இரண்டையுமே திமுக கைப்பற்றிவிட்டது.

 அரியலூரில் மொத்தமுள்ள 18 நகர்மன்ற உறுப்பினர்களில் 9 உறுப்பினர்களை திமுக கைப்பற்றிவிட்ட நிலையில், சுயேச்சை, தேமுதிக, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பில் வெற்றி பெற்றவர்களின் ஆதரவைப் பெறுவதில் திமுகவுக்கு எந்தவித சிக்கலும் இல்லை எனக் கூறப்படுகிறது.

 அதேநேரத்தில், 5 உறுப்பினர்களை மட்டும் கொண்டுள்ள அதிமுகவும், சுயேச்சை மற்றும் வெற்றி பெற்றுள்ள இதர உறுப்பினர்களோடு பேசி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், திமுகவைச் சேர்ந்தவரை நகர்மன்றத் துணைத் தலைவராக ஆக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 நகர்மன்றத் துணைத் தலைவர் பதவியை திமுகவுக்கு பெறுவதில் எந்தவிதச் சிக்கலும் இல்லை, நிச்சயம் திமுகவைச் சேர்ந்தவர்தான் துணைத் தலைவராகப் பதவியேற்பார் என அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 அரியலூரின் நிலை இப்படி இருந்தால், ஜயங்கொண்டத்தில் நகர்மன்றத் தலைவர் பதவியை திமுக கைப்பற்றினாலும், அங்கு மொத்தமுள்ள 21 நகர்மன்ற உறுப்பினர் பதவிகளில் அந்தக் கட்சி பெற்றிருப்பது 3 உறுப்பினர்களை மட்டும்தான். எனவே, ஜயங்கொண்டத்தில் திமுக துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு எந்தவிதமான வாய்ப்புகளும் இல்லை.

 ஜயங்கொண்டம் நகராட்சியில் அதிகபட்சமாக 8 உறுப்பினர்களைப் பெற்றுள்ள அதிமுக, சுயேச்சை உறுப்பினர்கள் 2 பேரின் ஆதரவுடன் துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.

 ஜயங்கொண்டம் நகராட்சியில் அதிமுகவுக்கு அடுத்து, 5 இடங்களைப் பெற்றிருப்பது சுயேச்சைகள் என்பதும், அதில் 2 பேர் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அவர்களின் ஆதரவைப் பெறுவதில் தங்களுக்கு எந்தவிதச் சிக்கலும் இல்லை எனவும், சுயேச்சைகளின் ஆதரவுடன் துணைத் தலைவர் பதவியை நாங்கள் கைப்பற்றுவோம் என்கின்றனர் அதிமுகவினர்.

 நகராட்சிகளைப்போலவே, பேரூராட்சிகளின் நிலையும் இப்படித்தான் உள்ளன. உடையார்பாளையம் பேரூராட்சியில் தலைவர் பதவியை சுயேச்சை கைப்பற்றினாலும், இங்கு அரசியல் கட்சிகளில் அதிக இடங்களைப் பிடித்திருப்பது அதிமுகவும், சுயேச்சைகளும்தான். அதிமுக 4 இடங்களிலும், சுயேச்சைகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றிருப்பதால், இவர்கள் இருவரும் இணைந்து, பேசி முடிவு செய்து கொள்வார்கள் எனவும், அதன் முடிவில் அதிமுகவுக்கு துணைத் தலைவர் பதவி கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இந்தப் பேரூராட்சியில் திமுக, பாட்டாளி மக்கள் கட்சி தலா 2 இடங்களிலும், தேமுதிக, காங்கிரஸ் ஆகியவை தலா ஓர் இடத்திலும் வெற்றி பெற்றிருப்பதால், இவர்கள் அனைவரும் இணைந்தாலும் துணைத் தலைவர் பதவியைப் பெறுவதற்கு இயலாது எனவும், ஒருவேளை சுயேச்சைகள் அனைவரும் இவர்களுடன் இணைந்தால் மட்டுமே துணைத் தலைவர் பதவியை பெறலாம் எனவும், ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 அரியலூர் மாவட்டத்தில் உள்ள மற்றொரு பேரூராட்சியான வரதராஜன்பேட்டையில் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றினாலும், இங்கு துணைத் தலைவர் பதவியை முடிவு செய்வது சுயேச்சைகளின் கையில் உள்ளது.

 காரணம் இங்குள்ள 15 வார்டுகளில் 9 வார்டுகளில் வெற்றி பெற்றிருப்பது சுயேச்சைகள்தான். திமுக, அதிமுக கட்சிகள் தலா 2 வார்டுகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளன.

 ஆனாலும், சுயேச்சைகளை இந்தக் கட்சிகள் பேசி முடித்தால், அதில் வெற்றி கிடைக்கும் கட்சிக்கு துணைத் தலைவர் பதவி என்பது கிடைக்கலாம்.

 ஆனால், இதற்கான வாய்ப்புகளும் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

 துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் அக். 29 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பேச்சுவார்த்தைகள் கட்சிகளுக்கு பலனைத் தந்தால் மாற்றம் வரலாம். இல்லாவிட்டால், சுயேச்சைகளைச் சேர்ந்த ஒருவர்தான் வரதராஜன்பேட்டையில் துணைத் தலைவராக வாய்ப்பு அதிகம் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT