முகப்பு
திருச்சி

கண் தான விழிப்புணர்வில் அரசியல்!

கரூர், ஜன. 5: கண் தான விழிப்புணர்வு தொடர்பாக எழுதப்பட்ட விளம்பரத்தில் அரசியல் புகுந்ததால், புதிய சிக்கலில் கரூர் நகர்மன்ற நிர்வாகம் சிக்கியுள்ளது. திமுகவின் கோட்டையாக விளங்கி வந்த கரூர் நகராட்சியை அண்

Updated On : 2 ஜனவரி, 2024 at 3:44 PM
பகிர்:

கரூர், ஜன. 5: கண் தான விழிப்புணர்வு தொடர்பாக எழுதப்பட்ட விளம்பரத்தில் அரசியல் புகுந்ததால், புதிய சிக்கலில் கரூர் நகர்மன்ற நிர்வாகம் சிக்கியுள்ளது.

திமுகவின் கோட்டையாக விளங்கி வந்த கரூர் நகராட்சியை அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுக முதல் முறையாகக் கைப்பற்றியது. மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற அதிமுக பெரும் பலத்துடன் உள்ளது.

இந்த நிலையில், பொதுமக்களுக்குத் தாராளமாக நன்மை செய்ய வேண்டிய கரூர் நகர்மன்ற நிர்வாகம் அரசியல் விளையாட்டில் சிக்கித் தவித்து வருகிறது.

கரூர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் வே. கதிரவன். திமுக நிர்வாகியான இவர், கரூர் மெஜஸ்டிக் அரிமா சங்கத் தலைவராகத் தற்போது உள்ளார். இந்தச் சங்கம் கண் தானம் பெறுவதில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறது.

இதற்காக கரூரில் பல இடங்களில் சுவர் விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு வகையான விளம்பரங்களைச் செய்துள்ளது.

அதில் ஒன்றாக கரூர் பழைய திண்டுக்கல் சாலையிலுள்ள மக்கள் பாதையில் நகராட்சிக்குச் சொந்தமான சிறிய ரவுண்டானாவில் கண் தானம் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களும், கண் தானம் செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய பொறுப்பாளர்களின் செல் எண்களும் குறிக்கப்பட்டிருந்தன. மேலும், சாலைப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களும் இதில் இடம் பெற்றிருந்தன.

இந்த விளம்பரத்தில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினராக வே. கதிரவனின் பெயரும் இடம் பெற்றதால், அப் பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் கரூர் நகர்மன்ற ஆணையருக்கு புகார் அளித்தனர்.

இதையடுத்து, நகர்மன்ற ஆணையரிடமிருந்து அரிமா மெஜஸ்டிக் சங்கச் செயலருக்கு 3-ம் தேதியிட்ட நோட்டீஸ் புதன்கிழமை வழங்கப்பட்டது.

அதில், "கரூர் நகரில் விளம்பரம் செய்து பொது திறவிட தோற்றத்தைச் சீர்குலைத்துள்ளீர்கள். இச் செயலானது தமிழ்நாடு திறந்த வெளி (தோற்றத்தைச் சீர்குலைத்தலைத் தடுத்தல்) சட்டத்தின் படி முரணான செயலாகும்.

எனவே, இந்த அறிவிப்பு பெற்ற 24 மணி நேரத்திற்குள் விளம்பரத்தை அழிக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வே. கதிரவன் கூறியது:

மெஜஸ்டிக் சங்கம் சார்பில் கடந்த 4 மாதங்களில் 19 ஜோடி கண்கள் தானமாகப் பெறப்பட்டு, 38 பேருக்குப் பார்வை அளித்துள்ளோம். மேலும், 50 ஜோடி கண்களைப் பெறத் திட்டமிட்டு, அதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கண் தானம் செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளவும் இந்த விளம்பரம் செய்யப்பட்டது.

இதில், கண் தானம், சாலைப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன.

ஜன. 1 முதல் சாலைப் பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுவதால், உரிய அனுமதி பெறாமல் முன்னதாகவே எழுதப்பட்டுள்ளது. இதில் எனது பெயர்தான் பிரச்னை என்றால் பெயரை வேண்டுமென்றாலும் அழித்துக் கொள்ளுங்கள்; செல்போன் எண் இருக்கட்டும் என்று கூறியிருந்தேன். ஆனாலும், நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள் என்றார் அவர்.

இந்நிலையில் ரவுண்டானாவில் எழுதப்பட்டிருந்த விழிப்புணர்வு வாசகங்களை கரூர் நகராட்சியினர் வியாழக்கிழமை அழித்தனர்.

கரூர் நகராட்சியில் குடிநீர் பிரச்னை, சுகாதாரச் சீர்கேடு, சாலைகளைப் பராமரித்தல் என்று தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்னைகள் இருக்கையில், இதுபோன்ற விழிப்புணர்வு வாசகங்களிலும் அரசியல் செய்வது ஏன் என்று சமூக நல ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →