அரியலூர், ஜன. 10: தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டு தொடர்ந்து வரும் நிலையில், சூரிய சக்தியின் மூலம் இயங்கும் பொருள்களின் பயன்பாடு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அதற்கான மானியத் தொகையையும் அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
தமிழகத்தில் மின் உற்பத்தியைக் காட்டிலும், அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சுமார் 3000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையின் காரணமாக, நகர்ப் பகுதிகளில் தினமும் 5 மணி நேரமும், ஊரகப் பகுதிகளில் குறைந்தது 7 முதல் 8 மணி நேரமும் தற்போது மின் தடை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் மின் உற்பத்தியைத் தொடங்கினாலும், வருங்காலத்தில் மின்சாரத்தின் பயன்பாடு மேலும் அதிகரிக்கும்.
அப்போதைய நிலைக்கு மின் உற்பத்தி சரியாக இருந்தால் பிரச்னை இருக்காது. ஆனால், அப்போதும் மின் பற்றாக்குறை தொடர்ந்தால் மக்களின் சிரமமும் தொடரும்.
இந்த பிரச்னைக்கு ஓரளவிற்குத் தீர்வு காண, சூரிய சக்தியின் பயன்பாட்டை அதிகப்படுத்துவதே சிறந்த வழியாகும். ஆனால், தமிழகத்தில் சூரிய சக்தியின் பயன்பாட்டின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் சரியாக எடுத்துச் செல்லப்படுவதில்லை என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையானது, சூரிய சக்தியைக் கொண்டு பயன்படுத்தப்படும் பொருள்களை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், என்னென்னபொருள்கள் உள்ளன, அதன் பயன்பாட்டின் தன்மை, விலை, மானியத் தொகை போன்ற விவரங்களை அறிவித்து, அதற்கான செயல்பாட்டையும் மேற்கொண்டு வருகிறது.
குடியிருப்பு, ஹோட்டல்கள், விடுதிகள், மருத்துவமனைகளுக்குப் பயன்படும் வகையில், தினமும் 100 லிட்டர் வெந்நீரை தயார் செய்யும் வகையிலான சூரியசக்தி வெந்நீர் அடுப்பு (சோலார் வாட்டர் ஹீட்டர் சிஸ்டம்ஸ்) ரூ. 16,000 விலையில் கிடைக்கிறது.
ஊரகப் பகுதிகளில் மின்சார வசதியில்லாத இடங்களில் சூரிய வீட்டு விளக்குகள் பல்வேறு வாட் அளவுகளிலும், ரூ. 9000 முதல் ரூ. 30,000 வரை என்ற விலைகளிலும் கிடைக்கின்றன.
இதுபோல, சோலார் குக்கர் பாக்ஸ், டிஸ் வடிவங்களில் கிடைக்கின்றன. இந்த சோலார் குக்கர் பாக்ஸ் வடிவம் ரூ. 1500 முதல் ரூ. 3000 விலையிலும் (10 முதல் 12 ஆண்டுகள் ஆயுள் காலம்), டிஸ் வடிவத்திலுள்ள குக்கர் ரூ. 5000 முதல் ரூ. 9000 வரையிலான விலையிலும் கிடைக்கிறது. இதன் ஆயுள் காலம் 20 ஆண்டுகள் ஆகும். ஆண்டுக்கு 10 காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்துவதை மிச்சப்படுத்தும் வகையில் இந்த குக்கரின் பயன்பாடு இருக்கும். இதுபோல, சூரிய லாந்தர் விளக்கு ரூ. 2500 விலையில் கிடைக்கிறது. 25 ஆண்டுகள் பயன்படுத்தக்கூடிய இந்த விளக்கின் பேட்டரி 5 ஆண்டுகள் நீடித்திருக்கும். இதன்மூலம் மண்ணெண்ணெய் பயன்பாட்டை ஆண்டுக்கு 50 லிட்டர் வரை குறைக்கலாம்.
சூரிய சக்தியில் இயங்கக் கூடிய சோலார் ஜெனேரட்டர் 150 வாட் முதல் ஒரு கி.வோ. வரையிலான அளவிலும், ரூ. 30,000 முதல் ரூ. 3 லட்சம் வரையிலான விலைகளிலும் கிடைக்கிறது. குடியிருப்புகள், தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், செல்போன் கோபுரங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இந்த சோலார் ஜெனரேட்டர்களை பயன்படுத்தலாம்.
இவ்வாறு சூரிய சக்தியைக் கொண்டு இயங்கக்கூடிய பல்வேறு பொருள்களுக்கு, பொருளின் தன்மை, அளவுக்கேற்றவாறு அரசு மானியத் தொகை வழங்குகிறது. இவ்வாறு செய்தாலும், சூரியசக்தியைக் கொண்டு இயங்கும் பொருள்களின் பயன்பாட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வு இன்னமும் போதுமான அளவில் மக்களிடையே கொண்டு செல்லப்படவில்லை என்பது பொதுவான கருத்தாக உள்ளது.
கூடுதல் பிரசாரம் தேவை: தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை, நடமாடும் வாகனத்தின் மூலம் சூரிய சக்தியின் பயன்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தும் பயணத்தை மேற்கொண்டாலும், மாவட்டத் தலைநகரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே வந்து செல்கிறது.
அவ்வாறு இல்லாமல், கிராமங்கள்தோறும் இதுபோன்ற நடமாடும் வாகனத்தை கொண்டு சென்று, மக்களிடம் சூரியசக்தி மூலம் கொண்டு பயன்படுத்தும் பொருள்களின் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும். தற்போது உள்ளது போல, மேலும் சில நடமாடும் வாகனங்களை அரசு இதற்காக வழங்க வேண்டும் என்கிறார் அரியலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சீனி. பாலகிருஷ்ணன்.
மேலும், நிலக்கரியை நம்பியோ, நீரை நம்பியோ மின்சார உற்பத்தி செய்வது ஒருபுறம் இருந்தாலும், எந்தக் காலத்திலும் உதவிடும் வகையில் இருக்கும் சூரியசக்தியின் பயன்பாடு குறித்த அவசியத்தை அனைத்துப் பகுதிகளிலும் கொண்டு செல்ல வேண்டும். சூரியசக்தியைக் கொண்டு இயங்கும் பொருள்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகையையும் அதிகரிக்க வேண்டும் என்கிறார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.