திருச்சி

காரைக்காலில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்படுமா?

காரைக்கால், ஜன. 19: காரைக்காலில் சம்பா நெல் அறுவடை தொடங்கிவிட்ட நிலையில், மத்திய உணவுக் கழகம் மற்றும் புதுச்சேரி அரசு நிறுவனங்கள் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்காமல் இருப்பதால், அறுவடை செய்யப்பட்ட

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

காரைக்கால், ஜன. 19: காரைக்காலில் சம்பா நெல் அறுவடை தொடங்கிவிட்ட நிலையில், மத்திய உணவுக் கழகம் மற்றும் புதுச்சேரி அரசு நிறுவனங்கள் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்காமல் இருப்பதால், அறுவடை செய்யப்பட்ட நெல்லின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா நெல் பயிர் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, திருநள்ளாறு, செல்லூர், சேத்தூர், அம்பகரத்தூர், நெடுங்காடு உள்ளிட்ட பகுதிகளில் பருவமழையில் தப்பித்த பயிர்கள், கடந்த டிசம்பர் மாத இறுதியில் தாக்கிய தானே புயலால் பாதிப்புக்குள்ளாகின.

கதிர்கள் கொட்டியும், பயிர்கள் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் இவை பாதிக்கப்பட்டன. காரைக்கால் மாவட்டத்தில் சம்பா நெல், வாழை, காய்கறி என சுமார் 5300 ஹெக்டேர் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசின் வேளாண் துறை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு காரைக்கால் மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய புதுச்சேரி அரசு நிறுவனங்கள் முன்வரவில்லை. மத்திய அரசு நிர்ணயித்த கொள்முதல் விலையைக் காட்டிலும் தனியாரிடம் குறைந்த விலைக்கு விவசாயிகள் நெல்லை விற்றனர். குறுவை அறுவடை நெல்லும் அரசால் கொள்முதல் செய்யப்படவில்லை.

மேலும், இதுபோன்ற இயற்கை பாதிப்புகளுக்குப் பிறகு அறுவடை செய்யப்படும் நெல்லை உரிய விலை கொடுத்து  வாங்க தனியார் வியாபாரிகள் முன்வரமாட்டார்கள்.

பாதிப்பைப் பொருத்து அரசு நிறுவனங்கள் நெல்லை கொள்முதல் செய்யும் போது, விவசாயிகள் பெருத்த நஷ்டத்திலிருந்து தப்பிக்க வாய்ப்பு ஏற்படும். இதனாலேயே அரசு கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஜனவரி முதல் வாரத்திலிருந்து காரைக்காலில் ஆங்காங்கே அறுவடைப் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது விவசாயிகளை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

விரைவில் கொள்முதல் நிலையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புதுச்சேரி வேளாண் அமைச்சர் மு. சந்திரகாசு அண்மையில் தெரிவித்திருந்த போதும், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து காரைக்கால் பிரதேச விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் பி. ராஜேந்திரன் கூறியது:

கடந்த 2 ஆண்டுகளாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. நிகழாண்டு சம்பா பருவத்தில் நெல் கொள்முதல் செய்ய சங்கம் சார்பில் வலியுறுத்தியுள்ளோம்.

அரசு கொள்முதல் நிலையங்கள் எதுவும் இதுவரை திறக்கப்படாததால், கடந்த ஒரு வாரமாக நெல்லை அறுவடை செய்யும் விவசாயிகள், தனியாரிடம் கொண்டு செல்கின்றனர்.

இதனால், வியாபாரிகள் புயல் பாதிப்பைக் காரணம் காட்டி விலையை வெகுவாகக் குறைக்கின்றனர்.

பல தனியார் வியாபாரிகள் நெல்லை கொள்முதல் செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.

அரசு நிர்ணயித்த விலையின்படி கிலோ ரூ. 10.50 -க்கு கொள்முதல் செய்ய வேண்டும். இதன்படி கொள்முதல் செய்ய யாரும் முன்வராததால் விவசாயிகள் நஷ்டமடையும் நிலை உருவாகியுள்ளது.

விவசாயிகளுக்கு புயல் பாதிப்புக்கான நிவாரணமும் இதுவரை கிடைக்கவில்லை. எனவே, அறுவடை செய்தும் இழப்பை ஈடுசெய்ய முடியாத நிலையில் காரைக்கால் விவசாயிகள் தவித்து வருகின்றனர் என்றார் அவர்.

காரைக்காலில் போதுமான அளவு நெல்லைக் கொள்முதல் செய்து இருப்பு வைக்க மத்திய உணவுக் கழகக் கிடங்கில் வசதி இருந்தாலும், அந்த நிறுவனம் அதற்கான நடவடிக்கைகளை இதுவரை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே, மாநில அரசு நிறுவனங்கள் தான் நெல்லை கொள்முதல் செய்ய முன்வர வேண்டும் என்ற நிலையில், அதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்கின்றனர் வேளாண் துறை வட்டாரத்தினர்.

இந்த நிலையில், அறுவடை செய்யப்படும் நெல்லை முடக்கிவைப்பதைத் தவிர விவசாயிகளுக்கு வேறு வழியில்லை.

அரசு அறிவித்தவாறு புயல் நிவாரணத் தொகை குறித்த காலத்தில் கிடைத்தாலோ அல்லது அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டாலோ மட்டுமே அடுத்து உளுந்து, பயறு போன்றவற்றைப் பயிரிட முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT