என்ன கொடுமை சார்.....
தஞ்சாவூர், மே 14: 108 அவசர கால ஊர்தியின் விதிகளால் 25 வயது இளைஞர் ஞாயிற்றுக்கிழமை வீதியிலேயே உயிரிழந்தார். விபத்தில் சிக்கிக்கொள்ளும் ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அழைத்துச் செல்லப்படும் ஒவ
தஞ்சாவூர், மே 14: 108 அவசர கால ஊர்தியின் விதிகளால் 25 வயது இளைஞர் ஞாயிற்றுக்கிழமை வீதியிலேயே உயிரிழந்தார்.
விபத்தில் சிக்கிக்கொள்ளும் ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அழைத்துச் செல்லப்படும் ஒவ்வொரு நிமிடமும் மிகமிக முக்கியமானதாகும். அவ்வாறான சூழ்நிலையில் மனித உயிர்கள் பலியாகி விடக் கூடாது என்பதற்காக 108 ஆம்புலன்ஸ் சேவைகள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரின் உதவிக்கு ஒருவரும் இல்லை என்ற காரணத்தால் தஞ்சாவூரில் ஒருவர் இறந்தார். தினம், தினம் நடைபெறும் எத்தனையோ சம்பவங்களில் இது, பலரது பார்வைக்கும் பரிதாபத்திற்கும் உட்பட்டு யாரும் உதவி செய்யாததால் நேரிட்ட மரணம். தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் புதிய நுழைவு வாயில் அருகில் ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் 2.30மணியளவில் சுமார்25வயது மதிக்கத்தக்கவர் உடலில் சில இடங்களில் காயங்களுடன் கிடந்துள்ளார்.
அப்போது, அந்த வழியாகச் சென்றவர்கள் இளைஞரை மீட்டு அருகிலிருந்த மரத்தின் நிழலில் அமர வைத்து முதலுதவி அளித்துள்ளனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூரிலிருந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் காயத்துடன் மீட்கப்பட்ட இளைஞரை ஆம்புலன்ஸில் ஏற்றியதோடு உடன் ஒருவர் கண்டிப்பாக வர வேண்டுமென வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால், ரயிலிலிருந்து இறங்கியவர்கள் தங்களது பல்வேறு அலுவல்கள் காரணமாகவும், தாங்கள் உதவி மட்டுமே செய்ய வந்ததால் தங்களால் உடன் வர முடியாதென தெரிவித்துள்ளனர்.
நாங்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றால், காயமடைந்தவருடன் யாராவது இருந்தால் மட்டுமே சிகிச்சையளிப்பார்கள் இதனால், எங்களால் இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாதென கீழே இறக்கி விட்டுவிட்டு ஆம்புலன்ஸ் சென்று விட்டது. இதனால், உதவிக்கு வந்தவர்களும் அந்த இளைஞரை மரத்தின் நிழலில் அமர வைத்து விட்டு சென்று விட்டனர்.
மயக்கத்திற்குள்ளான இளைஞர் மரத்தின் அடியிலேயே படுக்க வைக்கப்பட்டார். நேரம் செல்லச் செல்ல அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறையத் தொடங்கியது.
இரவு சுமார் 6.30 மணியளவில் மழையும் பெய்யத் தொடங்கியது. ஏற்கனவே காயத்துடன் இருந்தவர் மழையில் நனைந்து இறந்துபோனார். பின்னர் அந்த வழியாகச் சென்றவர்கள் இது குறித்து தஞ்சாவூர் ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், சடலம் கிடந்த இடம் தெற்கு காவல் நிலையத்திற்கு சொந்தமானது என்பதால் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பி. விஜயகுமார் சென்று சடலத்தை பார்வையிட்டார். அதன் பின்னர் சடலம் எடுக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட வேண்டிய இளைஞர் தற்போது அடையாளம் தெரியாத சடலமாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளார். விதிகள் மூலம் இவர் வாழ்வில் விளையாடியது விதி என்பதா? அன்பிழந்த மானுடம் என்று அலுத்துக் கொள்வதா.