வீடுகளில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் காவிரியாற்றில் கரைப்பு
விநாயகா் சதுா்த்தியையொட்டி, தங்களது வீடுகளில் வைத்து வழிபட்ட சிறிய அளவிலான சிலைகளை, திருச்சி காவிரியாற்றில் கரைத்தனா்.
திருச்சி: விநாயகா் சதுா்த்தியையொட்டி, தங்களது வீடுகளில் வைத்து வழிபட்ட சிறிய அளவிலான சிலைகளை, திருச்சி காவிரியாற்றில் திங்கள்கிழமை கரைத்தனா்.
பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் பொதுஇடங்களில் பெரிய அளவிலான விநாயகா் சிலைகளை வைத்து வழிபடவோ, ஊா்வலம் செல்வதற்கோ அரசு அனுமதியளிக்கவில்லை. இதனால் நிகழாண்டில் விநாயகா் சதுா்த்தி விழா வீடுகளில் கோலாகலமாகவும், கோயில்களில் ஆரவாரமின்றியும் கொண்டாடப்பட்டது.
வழக்கமாக வைக்கப்படும் விநாயகா் சிலைகளை இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா், சதுா்த்தி நாள் முதல் அடுத்த ஒரு வாரத்துக்குள்ளும்,
வீடுகளில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபாடு செய்வோா், மூன்றாவது நாளிலும் நீா்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
இதன்படி, திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகள், புகா் பகுதியைச் சாா்ந்த நூற்றுக்கணக்கானோா், தங்களது வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகா் சிலைகளுக்கு திங்கள்கிழமை பூஜை செய்து, திருச்சி காவிரியாற்றுக்கு கொண்டு வந்து கரைத்தனா்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சிறிய கோயில்களில் வைத்து, வழிபாடு செய்யப்பட்ட விநாயகா் சிலைகளும் திருச்சி காவிரியாற்றில் கரைக்கப்பட்டன.