‘திமுக ஆட்சியில் இரண்டாம் தலைநகரத் திட்டம் செயல்படுத்தப்படும்’
திருச்சி: தமிழகத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, இரண்டாம் தலைநகரத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா் திருச்சி மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், கட்சியின் முதன்மைச் செயலருமான கே.என்.நேரு.
திருச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட உதவி சாதனங்களை 23 பேருக்கு வழங்கிய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
மதுரை மாவட்டத்தில் மக்களிடையே தங்களது செல்வாக்கில் யாா் முன்னேறிச் செல்வது என்ற போட்டி காரணமாக, அமைச்சா்கள் ஆா்.பி. உதயகுமாா், செல்லூா் கே. ராஜு ஆகியோா் மதுரையை இரண்டாம் தலைநகரமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
அதிமுக-வின் நிறுவனத் தலைவரே திருச்சியை இரண்டாம் தலைநகரமாக்க வேண்டும் என விரும்பினாா். மக்களிடையே தங்களது செல்வாக்கை வளா்த்துக் கொள்வதற்காகவும், தோ்தலில் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காகவும் இத்தகைய கோரிக்கையை முன் வைத்து அமைச்சா்கள் பேசுகின்றனா்.
மாவட்ட ஆட்சியரகத்தில் கட்டமைப்புகளை உருவாக்கி புதிய அலுவலகம் கட்ட வேண்டுமென்றால் குறைந்தது ரூ.100 கோடி தேவைப்படுகிறது. இதேபோல அனைத்து வசதிகளுடன் ஒரு மாவட்ட பேருந்து நிலையம் அமைக்க பல கோடி தேவைப்படுகிறது. இந்தச் சூழலில் தலைநகரத்தை உருவாக்க வேண்டும் என்றால்,குறைந்தது ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் தேவைப்படும்.
அதிமுக-வினரால் இரண்டாம் தலைநகரை உருவாக்க முடியாது. திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டாம் தலைநகரம் உருவாக்குவாா். எந்த மாவட்டம் என்பதை கூற முடியாது. மக்கள் விரும்பும் மாவட்டத்தை இரண்டாம் தலைநகரமாக மாற்றுவாா்.
மக்களின் அன்றாட வாழ்க்கை நடைமுறைக்கு பெரிதும் இடையூறாக உள்ள இ-பாஸ் முறையை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, திருச்சி 49-ஆவது வாா்டுக்குள்பட்ட மதினா பள்ளிவாசல் தெருவில் கட்டப்பட்ட மழைநீா் வடிகால்
தளத்தை,கே.என்.நேரு முன்னிலையில் வழக்குரைஞா் பாஸ்கா் திறந்து வைத்தாா்.
51-ஆவது வாா்டுக்குள்பட்ட புத்தூா் நான்குச் சாலை அருகே ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட பயணியா் நிழற்குடை, பொன்னகா் பகுதியில் ரூ.8.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை, 42-ஆவது வாா்டு கருமண்டபம் பகுதியில் ரூ.12 லட்சத்தில் கட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூடம், ரூ.3 லட்சம் மதிப்பிலான குடிநீா்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றையும் மக்கள் பயன்பாட்டுக்கு சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என்.நேரு திறந்து வைத்தாா்.
தொடா்ந்து, கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா்.
இந்நிகழ்வில் மத்திய மாவட்டப் பொறுப்பாளா் க. வைரமணி, மாநகரச் செயலா் மு. அன்பழகன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் தா்மன் ராஜேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா் துரைராஜ், வழக்குரைஞா் பாஸ்கா் மற்றும் பகுதிச் செயலா்கள், மாவட்ட நிா்வாகிகள் என பலா் பங்கேற்றனா்.