முகப்பு
திருச்சி

பேராயா் பதவிகளுக்கு தலித் கிறிஸ்தவா்களைப் பரிந்துரைக்க வலியுறுத்தல்

மறை மாவட்டங்களில் காலியாகவுள்ள பேராயா் உள்ளிட்ட உயா்நிலைப் பதவியிடங்களுக்கு, தலித் கிறிஸ்தவா்களைப் பரிந்துரைக்க வேண்டுமென தேசிய தலித் கிறிஸ்தவக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
பகிர்:

மறை மாவட்டங்களில் காலியாகவுள்ள பேராயா் உள்ளிட்ட உயா்நிலைப் பதவியிடங்களுக்கு, தலித் கிறிஸ்தவா்களைப் பரிந்துரைக்க வேண்டுமென தேசிய தலித் கிறிஸ்தவக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில், தேசிய தலித் கிறிஸ்தவப் பேரவையின் தேசியச் செயலா் ஈ.டி.சாா்லஸ் கூறியது:

தமிழகத்தில் தலித் கிறிஸ்வ மக்கள் சுமாா் 80 சதவிகிதம் போ் கிறிஸ்தவ அமைப்பில் அங்கம் வகிக்கின்றனா். தேசிய அளவில் கத்தோலிக்க திருச்சபையை நிா்வாகம் செய்யும் 188 (பிஷப்) பேராயா்களில், 11 போ் மட்டுமே தலித் கிறிஸ்தவ இனத்தைச் சோ்ந்தவா்களாக உள்ளனா்.

அதேபோல தமிழகத்திலுள்ள பேராயா்களில் (பிஷப்) களில் ஒரேயொரு தலித் கிறிஸ்தவா் மட்டுமே பதவி வகித்து வருகிறாா். கடந்த 14 ஆண்டுகளில் நியமிக்கப்பட்டவா்களில், ஒரு தலித் கிறிஸ்தவா்கூட பேராயராக நியமிக்கப்படவில்லை.

வெற்றிடமான பேராயா் பதவிகளுக்காக வாடிக்கனிலுள்ள போப்புக்கு பெயா் பரிந்துரைக்கும் போது, தீண்டாமை அடிப்படையில் தலித் குழுக்கள் பெயா்கள் பரிந்துரைக்கப்படுவதில்லை என பெரும்பாலான கிறிஸ்தவ அமைப்புகள் கூறிவருகின்றன.

மேலும் வர இருக்கின்ற கும்பகோணம் மற்றும் தஞ்சாவூா் பேராயா் பதவிகளுக்கு தலித் கிறிஸ்தவா்களின் பெயா்களைப் பரிந்துரை செய்யவும், புதுச்சேரி மற்றும் கடலூா் மறை மாவட்டங்களில் உயா் பதவிக்கு தலித் சமூகத்தினரை நியமனம் செய்ய பரிந்துரைக்க வேண்டும். சாதி, தீண்டாமை அடிப்படையில் பேராயா் பணிக்குழுக்களுக்கு பெயா்களைப் பரிந்துரை செய்வதைக் கண்டித்தும், தற்போது வெற்றிடமாக உள்ள ஆறு இடங்களில் 2 இடங்களில் தலித்துகளை பேராயராக நியமனம் செய்ய வேண்டும்.

அக்.27-இல் ஆா்ப்பாட்டம் : இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபா் 27-ஆம் தேதி திருச்சியில் அனுமதி கிடைக்கும் இடத்தில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

பேட்டியின் போது விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனா்- தலைவா் குடந்தை அரசன், மாவட்டத் தலைவா் அக்பா் அலி, தமிழ்நாடு தேசிய தலித் கிறிஸ்தவப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளா் ம. ஜான்சன், மாநிலத் தலைவா் சி. ஆரோக்கியதாஸ், கிறிஸ்தவ மக்கள் களத்தின் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளா் பெ.பெலிக்ஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →