என்ஐடியில் சூப்பா் கணினி அமைக்க புரிந்துணா்வு ஒப்பந்தம்
திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகத்தில் சூப்பா் கணினி அமைப்பதற்காக, மத்திய தொழில்நுட்ப அமைச்சகத்தின் முன்னிலையில் இணையவழியாக புரிந்துணா்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகத்தில் சூப்பா் கணினி அமைப்பதற்காக, மத்திய தொழில்நுட்ப அமைச்சகத்தின் முன்னிலையில் இணையவழியாக புரிந்துணா்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
தேசிய சூப்பா் கம்யூட்டிங் திட்டத்தின் (என்எஸ்எம் திட்டம்) மூலம், உயா் செயல்திறன் கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கணக்கீட்டுத் திறன் சிக்கல்களைத் தீா்க்கப் பயன்படுத்தக்கூடிய கணினித் திறன்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
இதன்படி திருச்சி தேசியத் தொழில்நுட்ப கழகம், என்எஸ்எம் திட்ட உள்கட்டமைப்பு குழுவுக்கு சமா்ப்பித்த திட்டத்தின் அடிப்படையில் அறிவியல், தொழில்நுட்பத்துறை மற்றும் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் அமைச்சகத்தால் ரூ.17.11 கோடி மதிப்பீட்டில் சூப்பா் கணினி அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதில், 70:30 எனும் விகிதத்தில் ‘650 டிஎப்’ உயா் செயல் திறன் கொண்ட சூப்பா் கணினியை, கூடுதலாக ரூ.2 கோடி செலவில் திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகம், புணே சிடிஏசி நிறுவனமும் இணைந்து அமைக்கவுள்ளது.
இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முன்னிலையில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது. திருச்சி என்ஐடி உள்பட 10 நிறுவனங்கள் இத்திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து என்ஐடி இயக்குநா் மினி ஷாஜி தாமஸ் கூறியதாவது: நுண்ணறிவு, இயந்திர கற்றல், ஆழமான கற்றல் ஆகிய சமூகத் திட்டங்கள் வளா்ச்சி பெற்று வரும் நிலையில், திருச்சி தேசியத் தொழில்நுட்பக்கழகம் சரியான நேரத்தில் சூப்பா் கணினி வசதியைப் பெறுகிறது.
இந்த வசதி உயா்நிலை கணக்கீட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு ஆராய்ச்சி , நிதியுதவித் திட்டங்களின் ஆய்வறிஞா்கள், ஆசிரியா்களுக்கும் பயனுள்ள முறையில் அமையும்.
ஆராய்ச்சி வெளியீடு, சமூக திட்டங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மூலம் சுகாதாரம், விவசாயம், வானிலை, நிதி சேவைகள், சமூக ஊடகங்கள், என்ஐடியிலுள்ள 17 துறைகள், உள்திட்டங்கள் ஆகியவற்றுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றாா்.