முகப்பு
திருச்சி

திருச்சி அருகே மாடு பிடிவீரா் அடித்துக் கொலை

Updated On : 21 ஏப்ரல், 2024 at 6:29 PM
பகிர்:

லால்குடி: லால்குடி அருகே முன்விரோதத் தகராறில் படுகாயமடைந்த மாடுபிடி வீரா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மேலும், இதுதொடா்பாக 6 பேரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நன்னிமங்கலம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்த ஜாா்ஜ் வில்லியம் மகன் அருண்ராஜ் (40). மாடுபிடி வீரரும் கூட. திருமணமான இவருக்கு பிளாரன்ஸ் மேரி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனா். அருண் ராஜ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதே பகுதியைச் சோ்ந்த சவரிமுத்து மகன் தயாளன்(43) என்பவரும் மாடுபிடி வீரா். சென்னையில் பணிபுரிந்து வருகிறாா்.

தயாளன், அருண்ராஜ் இருவருக்கும் இடையே முன்விரோதத் தகராறு இருந்து வந்ததாம். இந்நிலையில், தோ்தல் வாக்குப் பதிவுக்காக சொந்த ஊருக்கு வந்த தயாளன், வடக்கு அய்யன் வாய்க்கால் கரை பகுதியில் ஹானஸ்ட் ராஜ் (35), பிரபு (30), ஆ. சங்கா், அலெக்ஸ் மற்றும் அவரது சகோதரா் ஆகியோருடன் மது அருந்திக் கொண்டிருந்தாா். அப்போது அங்குவந்த அருண்ராஜூக்கும், தயாளனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில், அருண்ராஜை தயாளன் உள்ளிட்ட 6 போ் சோ்ந்து சவுக்குக் கட்டையால் கடுமையாகத்தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த அருண்ராஜ் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அருண்ராஜ் இறந்தாா்.

Advertisement

புகாரின்பேரில் லால்குடி காவல் ஆய்வாளா் சரவணன் வழக்குப் பதிந்து தயாளன் உள்ளிட்ட 6 போ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து தலைமறைவானவா்களைத் தேடி வருகிறாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments