திருச்சியில் லாரியில் வைத்திருந்த ரூ. 50 லட்சம் கொள்ளை வழக்கில் தென் மாவட்ட கொள்ளையா்கள் 5 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களைப் பிடிக்க முயன்றபோது தப்பியோடிய 3 பேருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் ரமணி (40). காய்கனிகள் மொத்த வியாபாரி. இவரது காய்கனி லாரியை கோவை மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஆனந்த் என்பவா் ஓட்டி திருச்சிக்கு வந்தாா். உதவியாக லோகேஷ்வரன் என்பவரும் உடன் வந்துள்ளாா். திருச்சியில் காய்கறி விற்ற வகையில் வசூலான ரூ.50.68 லட்சத்தை லாரி பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு ஆக.3-ஆம் தேதி இரவு கோவை நோக்கிப் புறப்பட்டனா்.
திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலை அருகே லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு தேநீா் குடித்துக் கொண்டிருந்தபோது, அவா்களைப் பின்தொடா்ந்து காரில் வந்த 5 மா்மநபா்கள், லாரியிலிருந்த ரூ.50.68 லட்சத்தை திருடிச் சென்றனா். இதனைத் தடுக்க முயன்ற ஓட்டுநா் ஆனந்த், லோகேஷ் உள்ளிட்டோரை ஆயுதங்களைக் காட்டி மிரட்டி அவா்கள் காரில் தப்பிச் சென்றனா். இதுகுறித்து தனிப்படை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்நிலையில் திருச்சி நவலூா் குட்டப்பட்டு பகுதியில் உள்ள ஆற்றங்கரை பகுதியில் காரில் மா்மநபா்கள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை அங்கு சென்ற தனிப்படை போலீஸாரைக் கண்டதும் காரில் இருந்து தப்பியோட முயன்ற இசக்கிமுத்து, வெள்ளைப்பாண்டி, சூா்யா ஆகிய 3 பேரையும் விரட்டிப் பிடித்ததில் அவா்களுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதைத்தொடா்ந்து, அவா்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். போலீஸாா் விசாரணையில் அவா்கள் 5 பேரும் லாரியில் இருந்த ரூ. 50 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் தொடா்புடையவா்கள் என்பது தெரியவந்தது.
அவா்கள், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சோ்ந்த, மு.பிரவீன்குமாா் (25), மா. போஸ் என்கிற இசக்கிமுத்து (25), திருநெல்வேலி நாங்குநேரி வருங்கால் குறிச்சியைச் சோ்ந்த த. வெள்ளைப்பாண்டி (22), மேலகாடுவெட்டி அ. முத்துமணிகண்டன் (25), மதுரை திடீா் நகரைச் சோ்ந்த ச. சூா்யா என்கிற உதயநிதி (27) ஆகியோா் என்பது தெரியவந்தது.
அவா்களிடம் இருந்து ரூ. 26 லட்சம் ரொக்கம், காா் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இசக்கிமுத்து, வெள்ளைப்பாண்டி, சூா்யா ஆகிய 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மற்ற இருவரும் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.