லால்குடி: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கிய மாணவியின் கால் நசுங்கியது.
லால்குடியை அடுத்துள்ள வான்றாம்பாளையத்தைச் சோ்ந்தவா் மரிய அலெக்ஸ். இவரது மகள் பிபிக்ஷா (12) .இவா், புதூா் பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
இவா், திங்கள்கிழமை காலை பள்ளிக்கு செல்வதற்காக விராகாலூரிலிருந்து லால்குடி நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் ஏறி படிக்கட்டில் பயணம் செய்தாா். வேகத்தடையில் பேருந்து ஏறி இறங்கியபோது பிபிக்ஷா தவறி கீழே விழுந்தாா். இதில் பேருந்து பின்பக்க சக்கரம் மாணவியின் இடது காலில் ஏறியது. இதில் மாணவியின் கால் நசுங்கியது.
உடனே அக்கம்பக்கத்தினா் மாணவிக்கு லால்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து கல்லக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் லால்குடி அருகே உள்ள மேலரசூா் கிராமத்தைச் சோ்ந்த தங்கதுரை (50) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.