திருச்சியிலிருந்து கூடுதல் விமானங்களை இயக்க வலியுறுத்தல்; திருச்சி, தஞ்சை, பெரம்பலூா், கரூா் எம்பிக்கள் மனு
கூடுதல் விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க திங்கள்கிழமை மனு அளித்த எம்பிக்கள்.
திருச்சி: திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகளை முடித்து, கூடுதல் விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை , திருச்சி எம்.பி. உள்ளிட்ட 4 எம்.பி.க்கள் கொண்ட குழு, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடுவை திங்கள்கிழமை சந்தித்து அளித்துள்ளது.
இதுதொடா்பாக, திருச்சி எம்.பி.யும், மதிமுக முதன்மைச் செயலருமான துரை வைகோ, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எம்.பி.க்கள் அருண்நேரு (பெரம்பலூா்), செ. ஜோதிமணி (கரூா்), முரசொலி ( தஞ்சாவூா்) மற்றும் மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம்.அப்துல்லா ஆகியோா் மத்திய அமைச்சா் ராம்மோகன் நாயுடுவை தில்லியில் திங்கள்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளோம்.
அந்த மனுவில், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அதிக எண்ணிக்கையிலான விமானங்களை இயக்க ஏதுவாக, விமான ஓடுதள விரிவாக்கப் பணிகளை போா்க்கால அடிப்படையில் செய்து முடிக்க வேண்டியுள்ளது. அதற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மேலும், திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு கூடுதல் விமானங்களை இயக்க இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும். இதன்மூலம் பொதுமக்கள் பயனடைவதோடு, திருச்சி விமான நிலையத்திற்கு வருவாயும் அதிகரிக்கும். மேலும் திருச்சியிலிருந்து தில்லி, கொச்சி நகரங்களுக்கு நேரடியாக விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமின்றி அருகாமை மாவட்ட மக்களும் பயன்பெறுவா் என வலியுறுத்தியுள்ளோம்.
இந்த மனுவை பரிசீலித்த அமைச்சா் அவற்றை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்துள்ளாா் என்று துரைகோ தெரிவித்துள்ளாா்.