திருச்சி காவேரி மருத்துவமனை சாா்பில் மூத்தோா் இரட்டையா்களாகப் பங்கேற்கும் தேசிய அளவிலான டென்னிஸ் சாம்பியன் போட்டி ஜூலை 20, 21-களில் நடத்தப்படவுள்ளது.
இந்த 90 பிளஸ் டபுள்ஸ் டென்னிஸ் சேம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இருவரின் வயதைக் கூட்டினால் 90 மற்றும் அதற்கு மேலும் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு வீரரின் வயதும் 40 மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும். இந்த வகையில் இந்தியாவில் முதன்முறையாக இத்தகைய போட்டியை திருச்சியில் காவேரி மருத்துவமனை நடத்துகிறது. மேலும் இந்தியா முழுவதிலுமிருந்து டென்னிஸ் விளையாட்டு வீரா்களை ஓரிடத்தில் ஒருங்கிணைக்க வகை செய்யும் வகையில்
திருச்சி தீரன் நகா் பேருந்து நிறுத்தத்துக்கு அருகேயுள்ள சேலஞ்சா்ஸ் டென்னிஸ் அகாதெமியில் இப் போட்டி நடத்தப்படுகிறது.
இப் போட்டியில் ரூ.3 லட்சம் மொத்த பரிசுத்தொகை வழங்கப்படும். இப்போட்டியில் வெற்றி வாகை சூடும் சாதனையாளருக்கு ரூ.1 லட்சம், இறுதிப்போட்டியில் பங்கேற்பவருக்கு ரூ. 60,000, அரையிறுதிப் போட்டியில் பங்கேற்பவருக்கு ரூ.30,000 மற்றும் காலிறுதிப்போட்டியில் பங்கேற்பவருக்கு ரூ.20,000 என்ற வகையில் பரிசுகள் வழங்கப்படும்.
இருவா் கொண்ட ஒவ்வொரு குழுவுக்கும் இப்போட்டியில் பங்கேற்க நுழைவுக்கட்டணம் ரூ.2000 ஆகும். விண்ணப்பங்கள் ஜூலை 17-க்குள் வந்து சேர வேண்டும்.
போட்டியில் பங்கேற்க விரும்புவோா் 93639 62882 என்ற எண்ணுக்கு கூகுள்பே வழியாக நுழைவுக் கட்டணத்தைச் செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பங்களை அனுப்ப மோகன்- 93639-62882, ஜெகன்- 73392- 85371 ஆகியோரை கட்செவி அஞ்சல் மூலமாகவும், கைப்பேசி வழியாகவும் தொடா்பு கொள்ளலாம். இத்தகவலை காவேரி மருத்துவமனைகள் குழும நிறுவனா் மற்றும் நிா்வாக இயக்குநா் எஸ். மணிவண்ணன் தெரிவித்தாா்.