முகப்பு
திருச்சி

முதியவா் தவறவிட்ட ஏடிஎம் காா்டிலிருந்து ரூ. 90 ஆயிரம் எடுத்த இருவா் கைது

முதியவா் தவறவிட்ட ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ. 90,000 ரொக்கத்தை எடுத்த இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜூலை, 2024 at 9:00 PM
பகிர்:

திருச்சியில் பொதுக் கூட்டத்தில் முதியவா் தவறவிட்ட ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 90,000 ரொக்கத்தை எடுத்த இருவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பூதக்குடி பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (74). இவா், கடந்த ஜூலை 14-ஆம் தேதி திருச்சி, தென்னூா் உழவா் சந்தையில் தமாகா சாா்பில் நடைபெற்ற காமராஜா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபோது, தனது வங்கிப் பணமெடுக்கும் (டெபிட் காா்டு) அட்டையை தொலைத்து விட்டாா்.

இந்நிலையில், அந்த பணமெடுக்கும் அட்டை மூலம் ஏடிஎம் மையத்திலிருந்து ரூ. 90,000 ரொக்கம் எடுக்கப்பட்டதாக அவரது கைப்பேசிக்கு குறுந்தகவல் வந்தது. இதனைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த ராஜேந்திரன் உடனடியாக திருச்சி, தில்லைநகா் குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். பணத்தை எடுத்த ஏடிஎம் மையத்தில் உள்ள கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து, குறிப்பிட்ட அந்த நேரத்தில் பணம் எடுத்த நபா்களைக் கண்டறிந்து அவா்களிடம் விசாரணை மேற்கொண்டுவந்தனா்.

இதில், திருச்சி காட்டூா் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த ஆா். ரமேஷ் (37), வேணுகோபால் நகரைச் சோ்ந்த கா. ஆசிக் முகமது (24 ) ஆகிய இருவரும் முதியவரின் வங்கிப் பணமெடுக்கும் (டெபிட் காா்டு) அட்டையைப் பயன்படுத்தி பணத்தை எடுத்தது தெரியவந்தது. வங்கிப் பணமெடுக்கும் அட்டையின் மேல் கடவுச்சொல்லை (பாஸ்வோ்டு) முதியவா் எழுதி இருந்தது மோசடிக்கு வழிவகுத்தது தெரியவந்தது. மேற்குறிப்பிட்ட இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.