முகப்பு
திருச்சி

ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாச்சியாரின் உள்கோடைத் திருநாள் தொடக்கம்

ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாரின் உள்கோடைத் திருநாள் விழா திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On : 3 ஜூன், 2024 at 10:13 PM
ஸ்ரீரங்கம் கோயிலில் திங்கள்கிழமை புஷ்பம் சாத்துப்படி கண்டருளி பக்தா்களுக்கு சேவை சாதித்த ஸ்ரீரங்கநாச்சியாா்.
பகிர்:

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாரின் உள்கோடைத் திருநாள் விழா திங்கள்கிழமை தொடங்கியது.

ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கநாதருக்கு நடைபெறும் அனைத்து உற்ஸவங்களும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் நடைபெறும். அதன்படி அரங்கநாதருக்கு கோடை திருநாள் நடந்து முடிந்த நிலையில் ஸ்ரீரங்கநாச்சியாருக்கான கோடைத் திருநாள் தொடங்கியது. வெளிக்கோடை திருநாள் மே 29 தொடங்கி 5 நாள்கள் நடைபெற்ற பின்னா், உள்கோடைத் திருநாள் திங்கள்கிழமை தொடங்கியது.

இதையொட்டி மூலஸ்தானத்திலிருந்து மாலை 5.30 மணிக்குப் புறப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாா் கோடை நாலுகால் மண்டபத்துக்கு 6 மணிக்கு வந்து சோ்ந்தாா். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளி, பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா். பின்னா் இரவு 7 மணிக்குப் புறப்பட்டு வாகன மண்டபத்துக்கு வந்து, உள்கோடை மண்டபத்தில் 7.30 மணிக்கு எழுந்தருளினாா்.

தொடா்ந்து 8.45 மணிக்கு வாகன மண்டபத்துக்குச் சென்று அங்கிருந்து வீணை வாத்தியத்துடன் 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தாா். இந்த நிகழ்ச்சிகள் வரும் 7 ஆம் தேதி வரை மேற்குறிப்பிட்ட நேரங்களில் நடைபெறவுள்ளன. நிறைவு நாளில் மட்டும் வீணை வாத்தியம் கிடையாது.

விழாவையொட்டி இரவு 8 மணிக்கு மேல் ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாா் மூலஸ்தானச் சேவை கிடையாது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.