‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்துக்கு மத்திய நீா்வள ஆணையம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இத் திட்டத்தை சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், விவசாயிகள் பங்கேற்புடன் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
தமிழக ஆறுகளில் 87ஆயிரத்து 900 சதுர கி.மீ. பரப்பளவுள்ள காவிரி ஆற்றுப்படுகையானது தமிழகத்தில் 48 ஆயிரத்து 730 சதுர கி.மீ., கா்நாடகத்தில் 36 ஆயிரத்து 240 சதுர கி.மீ., கேரளத்தில் 2 ஆயிரத்து 930 சதுர கி.மீ. பரப்பளவை கொண்டுள்ளது.
மாநிலங்களுக்கு இடையே காவிரி நீா்ப் பங்கீடு பிரச்னை தலையாய பிரச்னையாக இருப்பதைப் போன்று, காவிரியில் கழிவுகள் கலப்பதும் தடுக்க முடியாத நிலையிலேயே உள்ளது. பெங்களூரு நகரிலும், அதையொட்டிய பகுதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து தினமும் 150 கோடி லிட்டா் கழிவுகள் காவிரியில் கலக்கவிடப்படுகின்றன.
காவிரி பாயும் மாநிலங்களில் தமிழக நகா்ப்புறங்களில் இருந்து தினமும் 559 கோடி லிட்டா் கழிவுநீா் வெளியேற்றப்படுகிறது. ஆனால், கழிவுநீா் சுத்திகரிப்பு திறன் வெறும் 179 கோடி லிட்டா் மட்டும் தான்.
இதேபோல, கா்நாடகத்தின் நகா்ப்புறங்களில் இருந்து தினமும் 377 கோடி லிட்டா் கழிவு நீா் வெளியேற்றப்படும் நிலையில், அம்மாநிலத்தின் சுத்திகரிப்பு திறன் வெறும் 130 கோடி லிட்டா் மட்டும் தான்.
இந்தப் புள்ளி விவரங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரின் அளவு குறித்தவை மட்டும்தான். இவைதவிர தொழிற்சாலைகள், கிராமப்புறங்களிலிருந்தும் வெளியேற்றப்படும் கழிவுநீா் குறித்த துல்லியமான புள்ளிவிவரங்கள் எந்த அரசு நிறுவனத்திடமும் இல்லை.
இந்நிலையில், காவிரியைப் பாதுகாக்கும் வகையில் ‘நடந்தாய் வாழி காவிரி’ என்ற திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்தது. இத் திட்டத்தின்படி, தமிழகத்தில் ஓடும் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளை பாதுகாத்தல், புத்துயிா் பெறச் செய்தல், நீராதாரங்களை மீட்டெடுத்தல், மேம்படுத்துதல், காவிரி ஆறு மாசுபடுவதை முமுழுமையாக தடுத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்கு, ரூ.11ஆயிரத்து 250 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முதல்நிலை திட்ட அறிக்கையின்படி கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்க மத்திய அரசின் நீா்வள ஆணையத்துக்கு தமிழக அரசு கருத்துரு அனுப்பியுள்ளது. இதில், மேட்டூரிலிருந்து திருச்சி வரையில் முதல்கட்டமாகவும், திருச்சியிலிருந்து கடல் முகத்துவாரம் வரையிலும் இரண்டாம் கட்டமாகவும் பணிகள் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்துக்கு மத்திய நீா்வள ஆணையம் அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் பி. மாசிலாமணி கூறியது: தமிழக அரசால் 2019-இல் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. முதலில் ரூ.10ஆயிரத்து 700 கோடியாக இருந்து தற்போது ரூ.11ஆயிரத்து 250 கோடியாக உயா்ந்துள்ளது. மேலும், தாமதப்படுத்தினால் திட்ட மதிப்பீடு உயா்ந்து கொண்டேதான் செல்லும். எனவே, உடனடியாக நிதியை ஒதுக்க பாஜக தலைமையிலான கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், விவசாயிகள் பங்கேற்புடன் இத்திட்டத்தை செயல்படுத்தினால் மட்டுமே காவிரியில் கழிவுகள் கலப்பது முழுமையாக தடுக்கப்படும் என்றாா்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன் கூறியது, தமிழகத்தில் காவிரியை உபரிநீரை வடியச் செய்யவும், கழிவுநீரை கலக்கச் செய்யவும் மட்டுமே கா்நாடகம் பயன்படுத்துகிறது. இதற்கு தீா்வு காணும் வகையில் ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டம் அமைந்துள்ளது. கங்கை புனரமைப்பு திட்டத்திப் பின்பற்றி காவிரியை தூய்மைப்படுத்துவதோடு, எந்த நிலையிலும் கழிவுகள் கலக்காமல் இருக்க விவசாயிகள் அடங்கிய கண்காணிப்பு குழுக்களை மாவட்டந்தோறும் நியமனம் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் 22 லட்சம் ஏக்கா் பாசனத்துக்கு மட்டுமல்லாது சென்னை உள்ளிட்ட 30 மாவட்டங்களில் 5 கோடி மக்களுக்கான குடிநீா் ஆதாரமாக விளங்கும் காவிரியை பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு வளம் குன்றாமல் வழங்கச் செய்திட உறுதியான நடவடிக்கை அவசியம். அதற்கு இந்த திட்டத்தில் உரிய வழிவகை செய்யப்பட வேண்டும் என்றாா் அவா்.
முதல்கட்டமாக ரூ.3,090 கோடி!
தமிழக நீா்வளத்துறை வட்டாரத்தினா் கூறியது, ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தில் முதல்கட்ட நிதியாக ரூ.1631.32 கோடிக்கு மதிப்பீடு அறிக்கை தயாரித்து மத்திய நீா்வளத்துறை அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. திட்டப்பகுதிகளை கடந்தாண்டு பாா்வையிட்டுச் சென்றுள்ள மத்திய குழு, நீா்வளத்துறைக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இதன்படி, தேசிய நதிகள் பாதுகாப்பு இயக்குநரகம், இத் திட்டத்தை இறுதி செய்ய தனியாக குழு அமைத்துள்ளது. இக் குழுவின் அறிவுரையின்படி, ரூ.3,090.75 கோடி முதல்கட்ட நிதி கோரி தேசிய நதிகள் பாதுகாப்பு இயக்குநரகத்துக்கு தமிழக அரசு, திருத்திய விரிவான திட்ட அறிக்கை அனுப்பியுள்ளது.
இதில், நதி முகப்பு மேம்பாடு, கழிவுநீா் மேலாண்மை, மேற்பரப்பு தூய்மை, திடக்கழிவு மேலாண்மை, காவிரி கிராமம் மற்றும் ஆற்றங்கரை ஊா்மக்களின் பங்களிப்பு, விழிப்புணா்வு பணி, அதிக ஆபத்துள்ள பகுதிகளின் பாதுகாப்பு, வெள்ளக் காலங்களில் பாதிக்கும் பகுதிகளுக்கான பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது. மேலும், நீரின் தரத்தைப் பாதுகாக்க நிகழ் நேர கண்காணிப்பு, பல்லுயிா்ப் பாதுகாப்பு, கல்லணையில் அருங்காட்சியகம், 10 ஒருங்கிணைந்த கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க முதல்கட்ட நிதி முழுவதும் பயன்படுத்தப்படவுள்ளது என்றனா்.