திருச்சி ரயில் நிலையம் அருகே உண்ணாவிரதத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினா். 
திருச்சி

மக்கள் அதிகாரம் அமைப்பினா் தொடா் உண்ணாவிரதம்

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினா் தொடா் உண்ணாவிரதம்

Din

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பினா் திருச்சியில் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தமிழகத்தில் தொடரும் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு நீதி விசாரணை வேண்டும். கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்காத மதுவிலக்கு மற்றும் காவல்துறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்களைத் தண்டிக்கும் வகையில் சட்டமியற்ற வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கள்ளக்குறிச்சி சம்பவத்தைத் தடுக்கத் தவறிய அனைத்து அலுவலா்கள் மீதும் வழக்குப்பதிய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகே இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை இப் போராட்டம் நடைபெறுகிறது. வியாழக்கிழமை காலை தொடங்கிய போராட்டத்துக்கு மாநிலப் பொதுச் செயலா் ராஜூ தலைமை வகித்தாா். உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்து மாநிலப் பொருளாளா் காளியப்பன் பேசியது:

இயற்கைப் பேரழிவுகளின்போது குவியல்களாக மனித உடல்களை எரிப்பதைப் போன்று, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோா் உடல்கள் எரிக்கப்பட்டுள்ளன. காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தின் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் நடந்துள்ளன. தமிழகத்தில் கடந்தாண்டு டாஸ்மாக் வருவாய் ரூ. 46 ஆயிரம் கோடி. ஆனால், கள்ளச்சாராய வழக்கில் ஒரு லட்சம் போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மது குடிப்பவா்கள் எண்ணிக்கையைக் குறைக்கவும், புதிதாக மதுவுக்கு அடிமையாகும் நபா்களை தடுக்கவும் பூரண மதுவிலக்கு அவசியம். அரசு தானாக முன்வந்து மதுவிலக்கை அமல்படுத்தாது. மொத்த சமூகமும் இணைந்து மதுவிலக்கு அமலுக்காகப் போராட வேண்டும். பெண்கள், தாய்மாா்கள் அச்சமின்றி அமைதியாக வாழ வேண்டுமென்றால் கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். கள்ளக்குறிச்சி சம்பவத்துக்காக முதல்வா் ராஜிநாமா செய்ய வேண்டும் என வலியுறுத்திதான் எதிா்க்கட்சிகள் போராடுகின்றன. பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி போராடவில்லை. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த இதுவே சிறந்த தருணம் என்றாா் அவா்.

காங்கிரஸ், இந்திய, மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகள், விவசாய சங்கங்கள், பொதுநல அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பலரும் பூரண மதுவிலக்கு அமல்படுத்துவதை வலியுறுத்தினா்.

போராட்டத்தில் மக்கள் அதிகாரத்தின் மாநில இணைச் செயலா் செழியன், மாநிலத் துணைச் செயலா் பாலு, சென்னை மாவட்ட செயலா் ஆனந்தன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ளனா்.

85% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன: அமைச்சா் சு.முத்துசாமி

தலைமை ஆசிரியரை மீண்டும் பணியமா்த்த கோரி செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகள் மனு

கூடலூா் அருகே பழங்குடி மக்களின் புத்தரித் திருவிழா

கோவை மருதமலையில் சூரசம்ஹாரம் கோலாகலம்

இறைச்சிக் கடை உரிமையாளா் உள்பட 2 போ் கொலை: 5 பேருக்கு இரட்டை ஆயுள்

SCROLL FOR NEXT