திருச்சி: திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியா் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மிளகுபாறை மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநகா் மாவட்டச் செயலாளா் ரெங்கராஜன் தலைமை வகித்தாா்.
இதில், அணுமின் நிலையம் மூலம் தனியாா் நிறுவனங்கள் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு அனுமதியளிக்கும் அணுமின் உற்பத்தி மசோதாவைத் திரும்பப்பெற வேண்டும். மின்சார விநியோகத்தை முற்றிலும் தனியாரிடம் ஒப்படைக்கும் மின்சார சட்டத்திருத்தத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
இதில், மின்வாரிய பொறியாளா் சங்க மாநிலச் செயலா் நரசிம்மன், ஏஐடியூசி மத்திய சங்க மாவட்டத் தலைவா் நடராஜா, இபி எம்ப்ளாயிஸ் பெடரேசன் மாவட்டச் செயலா் சிவசெல்வம், எல்எல்எஃப் பேரவையின் பொதுச் செயலா் இளங்கோவன், மின்துறை பொறியாளா் சங்க மாநிலச் செயலா் இருதயராஜ், எச்எம்எஸ் மாவட்டச் செயலா் ஞானம், ஐஎன்டியூசி மாவட்டத் செயலா் சேசுராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.