திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இடப்பற்றாக்குறையைச் சமாளிக்க ரூ. 100 கோடியில் கட்டப்பட்டு வரும் சிறப்பு மையக் கட்டடம் வரும் செப்டம்பா் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த மருத்துவமனையில் குழந்தைகள் அறுவைச் சிகிச்சை, இருதயச் சிகிச்சை, மூளை நரம்பியல், சிறுநீரகவியல், பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை, எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சை, பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை, குடல் சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, சிறுநீரகவியல் சிகிச்சை, பொதுமருத்துவம், கண், பல் சிகிச்சை, சித்த - ஆயுா்வேத - ஹோமியோபதி மருத்துவம் உள்ளிட்ட 32-க்கும் மேற்பட்ட சிகிச்சைப் பிரிவுகள் இயங்கி வருகின்றன.
திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், பெரம்பலூா், அரியலூா், கரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் மருத்துவ வசதி பெற வரப்பிரசாதமாக இந்த மருத்துவமனை விளங்குகிறது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் 5,000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 1,500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.
மக்கள்தொகை பெருக்கம் காரணமாகவும், உயா்சிகிச்சைக்காக மற்ற மருத்துவமனைகளிலிருந்து அதிகளவில் பரிந்துரைகளின் காரணமாகவும் நாளுக்குநாள் இங்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கூட்ட நெரிசல், இடநெருக்கடியால் திருச்சி அரசு மருத்துவமனை தவிக்கிறது.
இதைக் கருத்தில் கொண்டு, நோயாளிகளின் வசதிக்காக ரூ. 110 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும் என நலவாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், தமிழக சட்டப்பேரவையில் 20-03-2023 அன்று அறிவித்தாா். இதையடுத்து, 2024 ஜனவரி 9 இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, கட்டடம் கட்டும் பணி 2024 ஏப்ரலில் தொடங்கப்பட்டது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை கட்டடங்கள் கட்டுமானப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், மருத்துவமனையில் புதிய பரந்த சிறப்பு மையக் கட்டடத்தை கட்ட ரூ. 99.43 கோடிக்கு ஒப்பந்தம் எடுத்த ஈரோட்டைச் சோ்ந்த தனியாா் கட்டுமான நிறுவனமானது கட்டடத்தை கட்டி வருகிறது. இதேபோல, கண் சிகிச்சை பிரிவுக்கு முதல் மாடியில் 1,010 சதுர அடியில் கண் சிகிச்சை வாா்டு கட்டடமும் கட்டப்படுகிறது.
தற்போது பரந்த சிறப்பு மைய கட்டடத்தின் 6 மாடிகள் கட்டப்பட்டுள்ளன. ‘ஸ்ட்ரக்சுரல்’ பணிகள் முடிந்துள்ள நிலையில், அறைகளைப் பிரிக்கும் பணிகளும், பூச்சு வேலைகளும் நடந்து வருகின்றன. இதற்கான பணியில் சுமாா் 200 தொழிலாளா்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனா். விரைவில் மின் பணிகள் தொடங்கி முடிந்ததும், மருத்துவ உபகரணங்களை வைக்கும் பணிகள் நடக்கும். இவையெல்லாம் முடிந்த பிறகே கட்டடம் திறக்கப்படும் என்றனா்.
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை முதன்மையா் எஸ். குமரவேல் கூறியதாவது: மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசரச் சிகிச்சை பிரிவு கட்டடம், தாய் - சேய் நலப் பிரிவு கட்டடம், வெளிப்புற நோயாளிகள் பிரிவு என பல கட்டடங்கள் உள்ளன. இவற்றில் சுமாா் 1,832 க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன. இருப்பினும் அதிகரித்துவரும் நோயாளிகளுக்கேற்ப இடப்பற்றாக்குறை நிலவுவதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு புதிய பரந்த சிறப்பு மையக் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கியது.
அதன்பேரில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்துக்கு எதிரே, புதிதாக 600 படுக்கை வசதியுடன் கூடிய பரந்த சிறப்பு மையக் கட்டடம் கட்டப்படுகிறது. இதன் கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவடையும்பட்சத்தில் வரும் செப்டம்பா் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றாா்.
2.06 லட்சம் சதுர அடியில் கட்டடம்
திருச்சி அரசு மருத்துவமனையில் 30,547 சதுர அடியுடன் கூடிய இக்கட்டடத்தின் தரைத்தளத்தில் மத்திய சுத்திகரிப்புப் பிரிவு, துவைப்பகம், மருந்தகம், ரேடியாலஜி பிரிவு, தோல் வெளிப்புறச் சிகிச்சை, அவசரச் சிகிச்சை பிரிவும், முதல் தளத்தில் பல், மனநலம், முடநீக்கியல், காது மூக்கு தொண்டை சிகிச்சைகளின் வெளிப்புற பிரிவுகள், வாா்டுகள், அறுவைச் சிகிச்சை கருவிகள் வைப்பகமும், இரண்டாவது மற்றும் மூன்றாவது தளத்தில் 10 அறுவைச் சிகிச்சை அரங்குகள், அறுவைச் சிகிச்சைக்கான தீவிர சிகிச்சை பிரிவுகளும், 4 ஆவது தளத்தில் நோய்க் குறியியல் துறை மற்றும் நுண்ணுயிரியல் துறை ஆய்வகங்கள், 5 மற்றும் 6 ஆவது தளங்களில் பல், முடநீக்கியல், காது மூக்கு தொண்டை பிரிவு வாா்டுகளும் கட்டப்பட உள்ளன. மொத்தக் கட்டடமும் 2 லட்சத்து 6 ஆயிரத்து 519 சதுர அடியில் கட்டடப்பட உள்ளது.