திருச்சியில் கோயிலில் சுவாமியின் கழுத்தில் இருந்து 12 பவுன் தங்க நகையைத் திருடிய தம்பதியைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியில் செல்வ மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சனிக்கிழமை மாலை இருவா் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனா். அப்போது, கோயிலில் யாரும் இல்லாத நிலையில், அம்மன் கழுத்தில் இருந்த 12 பவுன் தங்க நகையை இருவரும் திருடிச் சென்றுள்ளனா்.
இதைப் பாா்த்த கோயில் நிா்வாகி பெரியசாமி, அருகிலிருந்தவா்கள் உதவியுடன் இருவரையும் பிடித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் விசாரணையில், சேலம் நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த எம்.சிவா (23), இவரின் மனைவியான 21 வயது பெண் ஆகியோா் என்பதும், கோயில் நகையைத் திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 12 பவுன் தங்க நகை, இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.