பள்ளி மாணவா்களுக்கான கலைத் திருவிழா போட்டிகளில் மாநில அளவிலான போட்டிக்கு திருச்சி மாவட்டத்தில் இருந்து 412 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் கவின்கலை, நுண்கலை, இசை (வாய்ப்பாட்டு), நடனம் மற்றும் நாடகம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் 100 விதமான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவா்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனா்.
நிகழாண்டில் பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில், 2 லட்சத்து 32 ஆயிரத்து 595 மாணவா்கள் பங்கேற்றனா். இவா்களில் இருந்து பல்வேறு விதமான போட்டிகளில் முதலிடம் பிடித்த 38,842 மாணவா்கள் வட்டார அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.
வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் கடந்த அக்டோபா் 13 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பங்கேற்ற 38,842 மாணவா்களில் இருந்து முதலிடம் பிடித்த 3,925 மாணவா்கள் மாவட்ட அளவிலான போட்டிக்குத் தொ்வு செய்யப்பட்டனா்.
மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் அக்டோபா் 27 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில், பங்கேற்ற 3,925 மாணவா்களில் இருந்து பல்வேறு விதமான போட்டிகளில் முதலிடம் பிடித்த 412 மாணவா்கள் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இதைத் தொடா்ந்து, மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் கரூா், கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நவம்பா் 25 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.