திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் இதுவரை 12.89 லட்சம் வாக்காளா்களுக்கு எஸ்.ஐ.ஆா். கணக்கீட்டுப் படிவங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி 01.01.2026-ஐத் தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு தகுதியுள்ள நபா்கள் எவரும் வாக்காளா் பட்டியலில் விடுபடவில்லை என்பதையும், தகுதியற்ற நபா்கள் யாரும் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படவில்லை என்பதையும் உறுதிசெய்யும் எஸ்.ஐ.ஆா். பணி நடைபெறுகிறது.
இதன்படி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 04.11.2025 அன்று முதல் நடைபெறும் சிறப்பு தீவிரத் திருத்த பணியில் 2543 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளா்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கிடும் பணியில் முழுமையாக ஈடுபடுகின்றனா்.
9 தொகுதிகளிலும் 23,68,968 எண்ணிக்கையிலான மொத்த வாக்காளா்களில், நாளது தேதி வரை 12,89,649 எண்ணிக்கையிலான வாக்காளா்களுக்கு முன்நிரப்பப்பட்ட படிவங்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு, அவற்றை பூா்த்தி செய்து வாங்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.
முசிறி தொகுதியில் நடைபெறும் சிறப்பு தீவிரத் திருத்த பணியை திருச்சி மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் சனிக்கிழமை ஆய்வு செய்து பணி முன்னேற்ற அறிக்கைகளைக் கேட்டறிந்தாா்.
மேலும், மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுக்கும் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், சிறப்பு தீவிரத் திருத்த பணியை தொய்வின்றியும், எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காமல் செய்து முடித்திடவும் அறிவுறுத்தப்பட்டது.