வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆா்.) விவகாரத்தில் அதிமுகவின் கபட நாடகம் எடுபடாது என முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற எம்.எல்.ஏ. இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் மேலும் பேசியதாவது: எஸ்.ஐ.ஆா். ஏற்படுத்தியுள்ள குழப்பங்கள், என்ன காரணத்துக்காக கொண்டுவரப்படுகிறது என்பதை விளக்கமாக காணொலியில் தெரிவித்துள்ளேன். நான் தொடங்கி கட்சியினா் அனைவரும் நேரம் பாா்க்காமல் சுழன்று பணியாற்றுகின்றனா்.
இருப்பினும், எதிரிகள் புது, புது உத்தியோடு நம்மை தாக்கவும், இயக்கத்தை அழிக்கவும் முயற்சிகளை மேற்கொள்கின்றனா். வருமானவரிச் சோதனை, சிபிஐ என பல ஆயுதங்களை எடுத்து மிரட்டிப் பாா்த்தனா். இப்போது, எஸ்.ஐ.ஆா். என்ற ஆயுதம் மூலம் திமுகவை அழிக்கப் பாா்க்கின்றனா். இது வேறு மாநிலங்களில் எடுபடலாம். தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது. திமுகவை ஒருபோதும் யாராலும் அழிக்க முடியாது.
எஸ்.ஐ.ஆா். விவகாரத்தில் பாஜகவையோ தோ்தல் ஆணையத்தையோ எதிா்ப்பதற்கு அதிமுகவுக்கு துணிச்சல் இல்லை. நாம் தொடுத்துள்ள வழக்கில் அதிமுக இணைந்து, கபட நாடகத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியின்போது, வாக்குச்சாவடி நிலை முகவா் (பிஎல்ஏ-2) என்பது கட்சியினரால் நியமிக்கப்படுவது. வாக்காளா் பட்டியல் திருத்தும் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு உதவியாக செயல்பட நியமிக்கப்படுகின்றனா்.
இதன்படி, திமுக சாா்பில் வாக்குச்சாவடி வாரியாக வாக்குச்சாவடி நிலை முகவா் நியமிக்கப்பட்டு முறையாக பயிற்சி அளித்து, பணியாற்றி வருகின்றனா். இப்படி நியமிக்கப்பட்டது தவறு எனக் கூறி, அவா்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் உச்சநீதிமன்றத்தில் நமது மனுவுடன் அதிமுக இணைந்துள்ளது என்பதுதான் உண்மை. அந்த கபட நாடகம் எடுபடாது.
தில்லியில் இருக்கும் பிக்பாஸுக்கு எடப்பாடி பழனிசாமி, ஆமாம், சாமி போட்டுத்தான் ஆக வேண்டும். முத்தரையா் சமூகத்தின் மீது கடைக்கண் பாா்வை மட்டுமல்லாது, எல்லா பாா்வையும் இருக்கும் என்றாா் முதல்வா்.