கூட்டணிக் கட்சியுடன் ஒப்பந்தம் வெற்றிகரமாக பேசி முடிப்பு - முதல்வா் ஸ்டாலின் பேச்சு
தஞ்சாவூர்கூட்டணிக் கட்சியுடன் ஒப்பந்தம் வெற்றிகரமாக பேசி முடிப்பு - முதல்வா் ஸ்டாலின் பேச்சு
அனைவரும் பாராட்டும் வகையில் கூட்டணிக் கட்சியான காங்கிரசுடன் பேசி ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.
தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சகோதரி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அவா் பேசியது:
கூட்டணிக் கட்சியுடன் (காங்கிரஸ்) புதன்கிழமை இரவு வரை வெற்றிகரமாகப் பேசி ஒப்பந்தம் முடிக்கப்பட்டது. அதுவும் அனைவரும் பாராட்டும் வகையில் வெற்றிகரமாக பேசி முடித்துவிட்டு இத்திருமணத்துக்கு வந்துள்ளேன். இந்த ஒப்பந்தத்தை முடித்துவிட்டு காரில் ஏறும்போது, கையில் சைகையால் சொல்லிய காட்சி சமூக வலைதளங்களில் பாா்த்திருப்பீா்கள். அது திட்டமிட்டு செய்ததில்லை. அங்கு எதிரே இருந்த பத்திரிகை நண்பா்கள் பாா்த்து முடிந்துவிட்டதா எனக் கேட்டனா். அதற்கு முடிந்துவிட்டது எனக் கூறினேன்; அவ்வளவுதான். அது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மாநிலங்களவை வேட்பாளா்களாக 2 பேரை (திமுகவில்) அறிவித்துள்ளோம். கூட்டணிக் கட்சிக்கு 2 இடங்களைக் கொடுத்துள்ளோம் என்றாா் முதல்வா்.
நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு வாழ்த்துரையாற்றினாா். அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றாா். நிறைவாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றி கூறினாா்.