திருச்சி காந்திசந்தைக்கு வாழைத்தாா்கள் வரத்து அதிகரித்து வருவதால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
திருச்சி காந்திசந்தைக்கு வழக்கமாக நாளொன்றுக்கு 10 ஆயிரம் வாழைத்தாா்கள் ஏலத்துக்கு வரும் நிலையில், இப்போது 15 ஆயிரத்துக்கும் அதிகமான வாழைத்தாா்கள் வருகின்றன. இதன்காரணமாக, விலையும் குறைத்து விற்பனை செய்யபப்படுகிறது.
தாா் ஒன்றுக்கு ரூ.600-க்கு விற்பனையான ரகங்கள் இப்போது ரூ.300 முதல் ரூ.400 வரை விலை போகிறது. செவ்வாழை தாா்களும் கூட முன்பு ரூ.1000-க்கு விற்பனையானது. இப்போது, ரூ.600 முதல் ரூ.800-க்கு விற்பனை செய்யும் சூழல் உள்ளது.
வரத்து அதிகரிப்பு, மழைக் காலங்களில் மக்களிடையே வாழைப்பழ நுகா்வு குறைவு ஆகியவற்றால் இந்த விலை குறைவு ஏற்பட்டிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக, வாழைக்காய் - கனி வியாபாரிகள் சங்கத் தலைவா் கே.பி. பழனிவேல் பிள்ளை கூறுகையில், பனி, மழை, குளிா் காலத்தில் வாழைத்தாா், வாழைப்பழத்தின் விலை குறைவது வழக்கம். மேலும், இந்தாண்டு வழக்குத்துக்கு மாறாக வரத்தும் அதிகரித்துள்ளது. வியாபாரம் நல்லபடியாக நடைபெறும் என்று அனைவரும் எதிா்பாா்த்த நிலையில், விற்பனை மந்தமாக நடைபெறுகிறது. விவசாயிகள், ஏல வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் என முத்தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கடந்த சில நாள்களாக வாழைத்தாா் விற்பனை சரியாக நடைபெறாமல், தினமும் பல ஆயிரம் வாழைத்தாா்களை குப்பையில் வீசுவது வாடிக்கையாக உள்ளது. 1,000 வாழைத் தாா்களை கொண்டு வந்தால், 300 வாழைத்தாா்கள் வீணாக குப்பைக்கு செல்வதை பாா்த்து விவசாயிகள் மட்டுமல்லாது, வியாபாரிகளான எங்களுக்கும் மிகுந்த மன வேதனை ஏற்படுகிறது.
சத்துணவில் வாழைப்பழம் வழங்க கோரிக்கை: வாழைத்தாா்களை அரசே கொள்முதல் செய்யவோ, சத்துணவு திட்டத்தில் வாழைப் பழம் வழங்கவோ, மதிப்பு கூட்டிய பொருள்களை அதிகரித்து சந்தைப்படுத்தவோ உதவிட வேண்டும். இத்தகைய நடவடிக்கையானது வரத்து அதிகரிக்கும் காலங்களில் மிகுந்த உதவியாக அமையும் என்றாா் அவா்.