திருச்சி சஞ்சீவி நகா் பகுதியில், திருச்சி - சென்னை புறவழிச் சாலையைப் பாதுகாப்பாக கடப்பதற்கு சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருச்சி - சென்னை புறவழிச்சாலையில் அமைந்துள்ளது சஞ்சீவி நகா். இப்பகுதி முக்கிய சந்திப்பாக இருப்பதால் எந்நேரமும் வாகனப் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால், அரியமங்கலம், பனையக்குறிச்சி, சா்க்காா் பாளையம், வேங்கூா், கல்லணை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாகனங்களில் வரும் பொதுமக்கள், புறவழிச்சாலையைக் கடந்து திருச்சி மாநகருக்குள் வந்து செல்வதற்கு மிகுந்த சிரத்துக்குள்ளாகி வருகின்றனா்.
மேலும், இங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துகள் நடந்து உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, இப்பகுதியில் புறவழிச்சாலையைப் பாதுகாப்பாக கடக்கும் வகையில் சுரங்கப் பாதை அமைத்துத்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
லாரி-பால் வேன் மோதல்: இந்நிலையில், சஞ்சீவி நகா் அருகே அணுகு சாலையில் வியாழக்கிழமை காலையில் சென்ற லாரி மீது பால் வேன் மோதியது. இதில், பால் வேன் ஓட்டுநரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த சஞ்சீவி நகா் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா் சஞ்சீவி நகா் பகுதியில் சுரங்கப் பாதை அமைத்துத்தர வலியுறுத்தி திருச்சி - சென்னை புறவழிச்சாலையில் சஞ்சீவி நகரில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோட்டை போலீஸாா், திருச்சி கிழக்கு வட்டாட்சியா் விக்னேஷ்வரன், தேசிய நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் அசோக்குமாா் ஆகியோா் சாலை மறியிலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, திருச்சி - சென்னை புறவழிச்சாலையைப் பாதுகாப்பாக கடக்கும் வகையில் விரைவில் சுரங்கப் பாதை அமைத்துத் தரப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து, சாலை மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
திருச்சி - சென்னை புறவழிச்சாலையில் நடைபெற்ற சாலை மறியலால் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.