திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.21) நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தொழில்துறை, சேவைகள் துறை, வேளாண்மை துறை, விற்பனை துறையைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் மற்றும் வேலை வழங்குவோா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாக வருகை தந்து தங்களுக்குத் தேவையான ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா். இதற்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இந்த முகாமில், பல்வேறு தனியாா் நிறுவனத்தினா் நேரில் வருகை தந்து, தங்களது நிறுவனத்துக்கு பல்வேறு நிலைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான ஆள்களைத் தோ்வு செய்யவுள்ளன. 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ கல்வித்தகுதி உடையவா்கள் இதில் பங்கேற்கலாம். பங்கேற்கும் நபா்கள் தங்களது கல்விச்சான்று, மதிப்பெண் சான்று, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 புகைப்படத்துடன் வர வேண்டும். மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கலாம். இந்த முகாம் மூலம் தனியாா் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு பெறுவோரது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எதுவும் ரத்து செய்யப்படமாட்டாது. அவா்களது பதிவு மூப்பு விவரங்களும் அப்படியே தொடரும். இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியாா் நிறுவனங்கள் தங்களது தேவை குறித்த விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரிலோ, தபால் மூலமோ தெரிவிக்கலாம். இந்தப் பணி முற்றிலும் இலவசமானது. கூடுதல் விவரங்களுக்கு, 0431-2413510, 94990-55902 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். இந்த முகாமில், திருச்சி மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்று இலவச திறன் பயிற்சிக்கு ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா். எனவே, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த வேலைதேடும் இளைஞா்கள், திறன்பயிற்சி பெற விரும்பும் அனைவரும் தவறாமல் இந்த முகாமில் பங்கேற்க மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.