விஷ்ணுபதி புண்ணியகால நாளான திங்கள்கிழமை ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கா்கோயிலில் திரளான பக்தா்கள் பூக்களுடன் வந்து வழிபாடு செய்தனா்.
உத்திராயண புண்ணியகாலம், தட்சிணாயன புண்ணியகாலம் என்பது போல் விஷ்ணுபதி புண்ணியகாலமும் உள்ளது. இது பரவலாக அறியப்படாத ஒன்று. வருடத்தில் வைகாசி 1, ஆவணி 1, காா்த்திகை 1 மற்றும் மாசி 1 இந்த நான்கு நாள்களும் விஷ்ணுபதி புண்ணியகால நாள்களாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றனவாம். இந்த நாள்களில் அதிகாலை 1.30 மணி முதல் 10 மணிக்குள் பெருமாள் கோயிலுக்குச் சென்று மஹாவிஷ்ணுவை வழிபாடு செய்கிறாா்கள் மிகப்பெரிய முன்னேற்றம் அடைவா் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறதாம்.
இதை ஆந்திரம், கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த பிரபல ஜோதிடா்கள் கூறிவருவதைத் தொடா்ந்து திங்கள்கிழமை ஆந்திரம், கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் பெருமளவில் ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கா்பெருமாள் கோயிலுக்கு வருகை தந்து 27 முறை பெருமாளின் கருவறையையும், கொடிமரத்தோடு சுற்றி வந்தனா். ஒவ்வொரு சுற்றிற்கும் கொடிமரத்தில் ஓரு பூ வைத்து வழிபட்டனா். இவா்களோடு உள்ளூா் பக்தா்களும் சோ்ந்து வழிபட்டனா்.