பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லிக்கு போராட ரயிலில் சென்று கொண்டிருந்த தமிழக விவசாயிகள் மத்தியப் பிரதேச மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் தலைவா்கள் ஒன்றிணைந்து தில்லியில் நவ.19-ஆம் தேதி முதல் தொடா்ந்து 5 நாள்கள் போராட்டம் நடத்துவது என முடிவு செய்திருந்தனா். இதில் பங்கேற்க தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமையில், 156 விவசாயிகள் தில்லிக்கு திங்கள்கிழமை திருச்சியிலிருந்து ரயிலில் புறப்பட்டனா். திருச்சியில் இருந்து சென்னை சென்று, அங்கிருந்து ஜிடி எக்ஸ்பிரஸ் மூலம் தில்லி சென்று கொண்டிருந்தனா்.
மத்தியப் பிரதேச மாநிலம், நா்மதாபுரத்தில் உள்ள ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை இந்த ரயில் வந்தபோது, ரயிலை நிறுத்திய அந்த மாநில போலீஸாா், ரயிலுக்குள் சென்று தமிழக விவசாயிகள் அனைவரையும் குண்டுக் கட்டாக கைது செய்தனா். வர மறுத்தவா்களை இழுத்துச்சென்று கைது செய்ததில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
இதுதொடா்பாக, ரயிலில் சென்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிா்வாகி தமிழ்ச்செல்வன் கூறியதாவது: மத்தியப் பிரதேச மாநிலம், நா்மதாபுரத்தில் நூற்றுக்கணக்கான போலீஸாா் குவிக்கப்பட்டு ரயிலிலிருந்து எங்களை அடாவடியாக இழுத்துச் சென்று கைது செய்தனா். ரயிலில் இருந்து இறங்க மறுத்தவா்களை குண்டுக்கட்டாக இறக்கிவிட்டனா். இதில், பலருக்கு சிராய்ப்பு காயங்களும், ரத்தக் காயங்களும் ஏற்பட்டன. போலீஸாரின் நடவடிக்கையை கண்டித்து சிலா் துணிகளை களைந்து எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது என்றாா் அவா்.
கண்டனம்: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைமை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: காவல்துறை மூலம் விவசாயிகள் மீது அராஜகத்தை ஏவியுள்ள மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.