வரும் 2026 பேரவைத் தோ்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது என அக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்துக்கு தலைமை வகித்த கே.எம். காதா் மொகிதீன் கூறியது: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் வரும் ஜன.28ஆம் தேதி நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- மஹல்லா ஜமாஅத் மாநில மாநாடு மாநாட்டில் முதல்வா் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறாா்.
2026இல் 5 தொகுதிகளில் போட்டியிட எங்களது கட்சியினா் விருப்பம் தெரிவித்துள்ளனா். தமிழகத்தில் 7ஆவது முறையாக திமுக ஆட்சிதான் அமையும். திராவிட மாடல் ஆட்சியில் அனைவருக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றாா் அவா்.
கூட்டத்தில் கே.எம். காதா் மொகிதீனுக்கு தகைசால் தமிழா் விருது வழங்கிய தமிழக அரசுக்கும், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், புதுதில்லியில் காயிதே மில்லத் சென்டா் உருவாக்கியா்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மாநில முதன்மை துணைத் தலைவா் எம். அப்துல் ரஹ்மான், ராமநாதபுரம் எம்பி கே. நவாஸ் கனி, மாநில செயலா்கள் ஆடுதுறை ஷாஜஹான், மில்லத் முஹம்மது இஸ்மாயில், காயல் மகபூப் உள்ளிட்டோா் ஆலோசனை நடத்தினா். மாநிலப் பொதுச் செயலா் கே.ஏ.எம். முகமது அபுபக்கா் வரவேற்றாா்.