பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவியை கொன்றவருக்கு மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக திருச்சியில் புதன்கிழமை அவா் மேலும் கூறியதாவது: தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடானது கல்வியில் சிறந்ததாக, பிற மாநிலங்கள் போற்றும் வகையில் உள்ளது. அரசுப் பள்ளி மாணவா்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா்.
இத்தகைய சூழலில் ராமேசுவரத்தில் தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக பள்ளி மாணவி கொல்லப்பட்டுள்ளாா். இதில் ஈடுபட்டவா் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளாா். பெற்றோா் மனநிலையிலிருந்து பாா்க்கும் எனக்கு மிகப்பெரிய வேதனை தரும் நிகழ்வாக உள்ளது. தவறு செய்தவருக்கு மிகப் பெரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் என்றாா் அவா்.