சானிட்டரி நாப்கின்கள்... படம்: எக்ஸ்பிரஸ் போட்டோஸ்.
தலையங்கம்

சுகாதார உரிமை!

அனைத்துப் பள்ளி மாணவிகளுக்கும் சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்க மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதைப் பற்றி...

ஆசிரியர்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு இலவசமாக நாப்கின்கள் வழங்க உத்தரவிடக் கோரி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாக்குர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கில் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜனவரி 30-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவின் கீழ், வாழ்வுரிமையில் மாதவிடாய் சுகாதார உரிமையும் அடங்கும். அனைத்துப் பள்ளி மாணவிகளுக்கும் சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்க வேண்டும், ஊரக, நகர்ப்புற பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியே கழிப்பறைகள் இருப்பதை மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

நாட்டில் 96 சதவீதத்துக்கும் அதிகமான பள்ளிகள் மாணவிகளுக்கான கழிப்பறைகளைக் கொண்டிருப்பதாக கல்வித் துறை தரவுகள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஐந்தாண்டுகளில் 92 சதவீதத்தில் இருந்து 96 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், 14 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் கை கழுவும் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் காகிதத்தில் மட்டுமே உள்ள வெறும் கணக்கெடுப்பு தரவுகள். உண்மை நிலை இதற்கு மாறானதாக உள்ளது என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

பெரும்பாலான மாநிலங்களில் செயல்படும் அரசுப் பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. தண்ணீர், சோப்பு, கிருமிநாசினி போன்ற வசதிகளின்றியும், தாழ்பாள்கள் இல்லாமலும், மின்சார வசதி மற்றும் உரிய பராமரிப்பின்றியும் கழிப்பறைகள் உள்ளன. இது போன்ற குறைபாடுகளால் பதின்ம வயது பருவத்தை எய்திய பள்ளி மாணவிகளின் மாதவிடாய் சுகாதாரம் கேள்விக்குறிக்கு உள்ளாகிறது.

15 முதல் 19 வயதுடைய இளம்பெண்களில் 64.5 சதவீதம் பேர் மட்டுமே சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகின்றனர் என்று தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு- 2019-21 தெரிவிக்கிறது. இதே காலகட்டத்தில் மேற்கண்ட வயதுடைய பள்ளி மாணவிகளில் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவோர் விகிதம் 33-லிருந்து 77 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கல்வித் துறை தரவுகள் கூறுகின்றன.

தன் மறைப்பு நிலை இல்லாத கழிப்பறைகள், நாப்கின்களை எரியூட்டும் இயந்திரங்கள் இல்லாதது போன்றவையும் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவதை மாணவிகள் தவிர்ப்பதற்கான காரணங்களாகவும் கருதப்படுகின்றன. மாதவிடாய் காலங்களில் மாணவிகளில் பலரும் பள்ளிக்கு வருவதைத் தவிர்க்கும் நிலையில், அதனால் இடைநிற்றல் விகிதமும் ஊரகப் பகுதியிலுள்ள பள்ளிகளில் அதிகரிக்க மறைமுகக் காரணமாக உள்ளது.

சானிட்டரி நாப்கின்கள் பயன்பாடு அவசியம் என்பது, அவற்றை மாணவிகள் பயன்படுத்த ஆரம்பிப்பது என்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவர்களின் திருமணத்துக்குப் பிறகான குழந்தைப் பேறிலும் பிரச்னையை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதால், மாதவிடாய் சுகாதாரம் குறித்து மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனவேதான், பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பள்ளிகளில் இலவச நாப்கின்களை வழங்குவதில் எந்தத் தடையும் இருக்கக் கூடாது.

தமிழகம் போன்ற மாநிலங்களில் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழலையும் கருத்தில் கொண்டு, அவற்றைப் பயன்படுத்திய பிறகு முறைப்படி அகற்றுவதற்கான தேவையான ஏற்பாடுகள் பள்ளி வளாகங்களில் செய்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

மக்கும் தன்மை கொண்ட சானிட்டரி நாப்கின்களை வழங்கும் போது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது. திடக் கழிவு மேலாண்மை குறித்து மாணவிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க உள்ளாட்சி நிர்வாகங்களுடன் கைகோத்து செயல்பட வேண்டும். மாதவிடாய் சுகாதாரம் குறித்து மாணவிகளுக்கு மட்டுமின்றி, மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மாதவிடாய் வலி, சுகாதாரம் என்பது பொதுவெளியில் பேசத் தயங்கும் விஷயமாக இருக்கும் வரையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் சொல்வதற்கு தயங்கி, பல்வேறு இன்னல்களை வளரிளம் பெண்கள், மாணவிகள் சந்திக்கின்றனர். சானிட்டரி நாப்கின்கள் வழங்குவது, உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுப்பது என்பது வெறும் எண்ணிக்கையுடன் நின்றுவிடக் கூடாது.

பள்ளிகளில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுக் கல்வி அவசியம். நாளைய தலைமுறை பெண்களின் ஆரோக்கியத்தை பள்ளிகள் அளவிலேயே உறுதி செய்வதுதான் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நோக்கம். பள்ளிகள் தாமே முன்வந்து செய்திருக்க வேண்டிய, மாநில அரசுகள் அரை நூற்றாண்டுக்கு முன்பே நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டிய அத்தியாவசியத் தேவைக்குக்கூட உச்சநீதிமன்றம் தலையிட்டுக் கட்டளைப் பிறப்பிக்கவும் வழிகாட்டவும் நேரும் அவலத்தை என்னவென்று சொல்ல?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவைத் தலைவரை நீக்க தீா்மானம்: மாா்ச் 9-இல் விவாதம் - வாக்கெடுப்பு! மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு தகவல்!

அங்கீகாரம் தேடும் பெண் விவசாயிகள்

தூங்கிக் கொண்டிருந்த நபா் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

குருகிராம்: குளத்திலிருந்து 11-ஆம் வகுப்பு மாணவி சடலம் மீட்பு!

சத்ரபதி சிவாஜியுடன் திப்பு சுல்தானை ஒப்பிட்டுப் பேச்சு: மகாராஷ்டிரத்தில் பாஜக - காங்கிரஸ் மோதல்! 9 போ் காயம்!

SCROLL FOR NEXT