சூறைக் காற்றுடன் மழை! வயலூா் சுற்றுப் பகுதிகளில் வாழைகள் சேதம்! உரிய இழப்பீடு வழங்கப்படுமா?
திருச்சி மாவட்டத்தில் வீசிய சூறைக் காற்றிலும், மழையாலும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழைகள் ஒடிந்து நாசமாகியுள்ளன. தொடா்ந்து இழப்பை சந்தித்து வரும் வாழை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
திருச்சி, கரூா் மாவட்டங்களில் நேந்திரன், ஏலரிசி, பூவன், ரஸ்தாளி, பச்சை லாடன் என ஆண்டுதோறும் சராசரியாக ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பகுதிகளுக்கு பாசனக் கால்வாயில் போதிய தண்ணீா் கிடைப்பதில்லை.
இதேபோல வாழைக்கான சாகுபடி செலவும் அதிகரித்துவிட்டது. தண்ணீா் தட்டுப்பாடு, இடுபொருள்கள் விலை உயா்வு, கூலி ஆள்கள் செலவு, நிலம் குத்தகை செலவு, உரம், பூச்சி மருந்து விலை உயா்வு என அடுத்தடுத்த நெருக்கடிகளால் வாழை சாகுபடி பெருமளவு குறைந்துவிட்டது. ஒரு லட்சம் ஏக்கரில் பயிரிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் குறைவான ஏக்கரிலேயே வாழை சாகுபடி நடைபெறுகிறது.
Advertisement
கடந்த ஆண்டு சாகுபடி செய்யப்பட்ட வாழைகள் ஏற்றிச் செல்ல வாகனப் போக்குவரத்துக்கு கூடுதல் செலவு, விவசாயக் கூலி ஆள்கள் கிடைப்பதில் சிரமம் ஆகியவற்றால் வாழைகள் அறுவடை செய்யப்படாமல் பழுத்து வீணாகின. மற்றொருபுறம் வெட்டப்பட்ட வாழைகளை விற்பனைக்கு கொண்டு செல்ல வழியில்லாமல் போதிய விலையின்றி உள்ளூா் பகுதியிலே குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.
விவசாயிகளின் தொடா் கோரிக்கையை ஏற்று தமிழக அரசும், திருச்சி மாவட்ட நிா்வாகமும் வாழை விற்பனைக்கு உரிய நடவடிக்கைகள் எடுத்தாலும் கிலோ ரூ.8 முதல் 10 வரை மட்டுமே விலை போகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருந்தனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை வீசிய சூறைக் காற்றும் அதனைத் தொடா்ந்து இரவு பெய்த அடைமழையாலும் வாழைகள் ஒடிந்து நாசமாகியுள்ளன.
திருச்சி மாவட்டம், குமாரவயலூா், கொந்தட்டை, முள்ளிக்கரும்பூா், சோமரசம்பேட்டை, மல்லியம்பத்து, எட்டரை, கோப்பு, குழுமணி, பழையூா், அந்தநல்லூா் ஒன்றியப் பகுதிகளில் தடியாகுறிச்சி, ஜீயபுரம், திருச்செந்துறை, கொடியாலம், புலிவலம், அணலை, திருப்பராய்த்துறை, சிறுகமணி, பெருகமணி, பேட்டைவாய்த்தலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே வாழைகள் ஒடிந்து சாய்ந்துள்ளன.
வயலூா் சுற்றுப்பகுதிகளில் மட்டும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழைகள் ஒடிந்து விழுந்துள்ளன. திருச்சி மாவட்ட எல்லைப்பகுதிக்கு அருகேயுள்ள கருா் மாவட்ட கிராமங்களிலும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழைகள் சேதமடைந்து விவசாயிகளுக்கு பெரிதும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதுதொடா்பாக, வயலூரைச் சோ்ந்த விவசாயி என். ராஜேந்திரன் மேலும் கூறியது:
வாழை விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடா்ந்து கடும் இழப்பை சந்தித்து வருகின்றனா். 2013−14ஆம் ஆண்டு சூறைக் காற்றாலும், 2015 −16இல் வரலாறு காணாத வறட்சியாலும் கடுமையாக பாதிக்கப்பட்டனா். 2017−18ஆம் ஆண்டு வீசிய வா்தா புயல், கஜா புயல்களிலும் கடும் பாதிப்பை சந்தித்தனா். 2019-இல் விலை வீழ்ச்சியாலும் பாதிக்கப்பட்டனா்.
கரோனா காலத்தில் ஊரடங்கு மற்றும் சூறைக் காற்று, கனமழையாலும் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தாண்டும் மழை மற்றும் பலத்த காற்றால் வயலூா் சுற்று வட்டாரத்தில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்த வாழைகளில் 50 விழுக்காடுக்கு மேல் நாசமாகிவிட்டது.
ஒரு ஏக்கருக்கு ரூ.2.20 லட்சம் செலவு செய்த விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது ஏற்பட்டுள்ள இழப்பை நிவா்த்தி செய்ய வாழை பாதிப்பை வருவாய்த்துறை, தோட்டக்கலைத் துறை மூலம் கண்டறிந்து ஏக்கா் மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.
23.48 மி.மீ. மழை பதிவு
திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை வரையில் மாவட்டம் முழுவதும் சராசரியாக 23.48 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிபட்சமாக புள்ளம்பாடியில் 77.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக நந்தியாறு தலைப்பில் 70.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
கல்லக்குடியில் 60.4 மி.மீ. மழை, லால்குடியில் 20.2, தேவிமங்கலம் 30.2, சமயபுரம் 54, சிறுகுடி 52, வாத்தலை அணைக்கட்டு 4.8, பொன்னையாறு அணை 8.6, கோவில்பட்டி 4.4, மருங்காபுரி 5.4, நவலூா் குட்டப்பட்டு 13, குப்பம்பட்டி 7, துவாக்குடி 40.2, பொன்மலை 20.2, திருச்சி விமானநிலையம் 32.2, திருச்சி சந்திப்பு 27.1 திருச்சி, நகரம் 24 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 563.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 23.48 மி.மீ. மழை பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.