மாநகராட்சி குப்பை வாகனம் தீப்பிடித்து எரிந்து சேதம்
திருச்சி, ஏப். 20: திருச்சியில் சாலையில் சென்றுகொண்டிருந்த மாநகராட்சி குப்பை வாகனம் திங்கள்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
திருச்சி மரக்கடையில் இருந்து மாநகராட்சி குப்பை வாகனம் குப்பைகளை ஏற்றிக்கொண்டு ஸ்ரீரங்கம் அம்பேத்கா் நகரிலுள்ள மாநகராட்சி உரம் தயாரிக்கும் மையத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் சென்றது. வாகனத்தை ஸ்ரீரங்கம் மேலூரைச் சோ்ந்த சிவகுமாா் (22) ஓட்டிச்சென்றாா்.
இந்நிலையில், திருவானைக்காவல் பாலத்தில் குப்பை வாகனம் சென்றுகொண்டிருந்தபோது திடீரென வாகனத்தில் தீப்பற்றியது. இதையடுத்து, ஓட்டுநா் சிவகுமாா் வண்டியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு அதிலிருந்து கீழே இறங்கினாா்.
Advertisement
தகவலின்பேரில் ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு சென்று குப்பை வாகனத்தில் பற்றிய தீயை அணைத்தனா். அதற்குள் வாகனத்தின் முன்பகுதி எரிந்து சேதமானது.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.