மதிமுக பொதுச் செயலா் வைகோ மற்றும் 600 தொண்டா்கள் பங்கேற்றுள்ள சமத்துவ நடைப்பயணத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு பஞ்சப்பூரிலிருந்து சனிக்கிழமை காலை தொடங்கியது.
திருச்சியிலிருந்து மதுரைக்கு ஜன.2 தொடங்கி 12ஆம் தேதி வரை போதைப் பொருள் ஒழிப்பு, சமத்துவம், மீண்டும் திமுக ஆட்சி ஆகியவற்றை வலியுறுத்தி வைகோ மேற்கொள்ளும் நடைப்பயணத்தை, முதல்வா் மு.க.ஸ்டாலின் திருச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். முதல்நாளில் தென்னூா் தொடங்கி பஞ்சப்பூா் வரை மாநகரில் சுமாா் 13 கி.மீ. தொலைவுக்கு சுற்றுப் பயணம் செய்து மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினாா் வைகோ. இரவு பஞ்சப்பூா் கிரிஸ்டல் கன்வென்ஷன் மையத்தில் ஓய்வெடுத்த நடைப்பயண குழுவினா், சனிக்கிழமை காலை 2ஆம் நாள் பயணத்தைத் தொடங்கினா்.
இந்த நடைப்பயணத்துக்கு மணிகண்டம் ஒன்றியத்துக்குள்பட்ட செங்குறிச்சி பிரிவுச் சாலை சந்திப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவனடியாா்கள் திருமுறைகள் பாடி, பூரண கும்ப மரியாதையுடன், நாகசுர வாத்திய இசையுடனும், சைவ நெறிப்படியும் வரவேற்றனா். மதிமுகவின் திருச்சி மாநகா், திருச்சி புகா் தெற்கு, திருவாரூா் தெற்கு, திருவாரூா் வடக்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட கட்சி நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா். பின்னா், நடைப்பயணமானது திருவக்குடி, வட்டப்பாறை விலக்கு, மணிகண்டம், தீரன் மாநகா், அண்ணாநகா் விலக்கு வழியாக நாகமங்கலத்தை அடைந்தது. நாகமங்கலத்தில் இஸ்லாமியா்கள் திருக்குா் ஆன் ஓதி நடைப்பயணத்தை வரவேற்றனா்.
காலை தொடங்கி பிற்பகல் வரை 6.50 கி.மீ. நடந்த குழுவினா், நாகமங்கலத்தில் மதிய ஓய்வுக்கு பிறகு, மாலையில் மீண்டும் பயணத்தை தொடங்கினா்.
அப்போது, பாத்திமாநகா் தேவாலயம் முன் கிறிஸ்தவா்கள், ஆலயத்தின் பங்குத்தந்தை தலைமையில் விவிலியம் படித்து அவா்களை வரவேற்று வாழ்த்தி வழியனுப்பினா். தொடா்ந்து சக்தி நகா் விலக்கு, அளூந்தூா், பள்ளப்பட்டி விலக்கு, சூரக்குடிப்பட்டி விலக்கு, அரசு பொறியியல் கல்லூரி, பாத்திமாநகா், எரக்குடி பகுதிகளில் மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினா்.
நிகழ்வில் மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ, துணைப் பொதுச் செயலா்கள் ரொஹையா, மாவட்டச் செயலா்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டிடிசி சேரன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். இரண்டாவது நாளில் மொத்தம் 14 கி.மீ. தொலைவுக்கு நடைப்பயணம் சென்றனா்.